பொள்ளாச்சி அருகே கடையை உடைத்து 32 போன்கள் திருட்டு - இருவர் கைது

By எஸ்.கோபு

பொள்ளாச்சி: நெகமம் வடசித்தூர் பகுதியில் கடையை உடைத்து மொபைல் போன்களை திருடிய சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்த போலீஸார் தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி மாவட்டம் நெகமம் அடுத்த வடசித்தூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (29) என்பவர் மொபைல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மொபைல் போன் கடையை உடைத்த மர்ம நபர்கள், கடையில் இருந்த விலை உயர்ந்த 32 மொபைல் போன்களை திருடிச் சென்றனர். இது குறித்து நெகமம் போலீஸார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நெகமம் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் போலீஸார் நெகமம் அடுத்த காட்டம்பட்டி - கள்ளிமடை பிரிவு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விருத்தாச்சலத்தை சேர்ந்த சம்பத் (19) மற்றும் கோட்டூரை சேர்ந்த சஞ்சய்குமார் (22) என்பதும், கடந்த 24-ம் தேதி செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பித்து வந்த சம்பத் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கோவை பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர்.

மேலும், கடந்த 27-ம் தேதி 5 பேரும் சேர்ந்து வடசித்தூர் பகுதிக்கு வந்து மொபைல் போன் கடையை உடைத்து திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீஸார் சம்பத் மற்றும் சஞ்சய்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர். திருட்டில் தொடர்புடைய மற்ற மூன்று பேர் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE