கோவை அருகே 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த இருந்த 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் வழியாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒரு கும்பல், விற்பனைக்காக கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளதாக சூலூர் போலீஸாருக்கு இன்று (மே 31) தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான சூலூர் போலீஸார், சூலூர் படகு இல்லம் அருகே இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டைகளில் இருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.57 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பெங்களூரில் இருந்து வியாபாரிகளிடம் வாங்கி, கோவைக்கு விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கெலாராம் (26), நாகராம் (24), செட்டிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்ட பூபதி (39) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து போலீஸார் மூவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE