கோவை: கோவையில் யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை வனச்சரக எல்லையில் சில நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்பனை செய்யப் போவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்களைப் பிடிக்க கோவை மண்டல வனப் பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான ராம சுப்பிரமணி வழிகாட்டுதல் படி மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மேற்பார்வையில் இரண்டு தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் வனச்சரகர் திரு முருகன் உள்ளிட்டோர் தலைமையில் தனிக் குழுவினர் யானை தந்தம் விற்பவர்களின் வாகனத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இன்று அந்தக் கும்பல் யானை தந்தம் விற்பனை செய்ய முயன்றபோது, வனத்துறையினர் அவர்களை வாகனத்தில் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். இதையடுத்து யானைத் தந்தத்தை விற்க முயன்றதாக கீரணத்தத்தைச் சேர்ந்த சர்வேஷ் பாபு (46), கூடலூரை சேர்ந்த சங்கீதா, இடையர்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் (31), வெள்ளலூரைச் சேர்ந்த லோகநாதன் (38), நாகமாநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அருள் ஆரோக்கியம் (42), பாலமுருகன் (47) ஆகிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, அவர்கள் வைத்திருந்த யானை தந்தம் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். கைதான 6 பேரும் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 5-ல் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
» ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது
» ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: நாக்பூரில் 4 பேர் கைது