ஆலங்குளத்தில் கஞ்சா விற்றதாக 4 பேர் கைது: தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்

By அ.அருள்தாசன்

தென்காசி: ஆலங்குளம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான தகராறில் தலைமை காவலரை இரு இளைஞர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம்விலக்குப் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற 4 பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ் (26), பெர்லின் (24), கஜேந்திரா (22) மற்றும் மரிய சுந்தரம் மகன் நவீன் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து, அவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் மகேஷின் சகோதரர் கல்யாணசுந்தரம் ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு சென்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து நேற்று இரவில் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே தலைமை காவலர்கள் தங்கதுரை, ஜான்சன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்யாணசுந்தரமும், அவரது நண்பர் நிர்மல்குமாரும் தலைமை காவலர்களிடம் தகராறு செய்தனர்.

அப்போது தலைமை காவலர்களை அவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றனர். தலைமை காவலர்கள் சுதாரித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்தி சென்று கல்யாணசுந்தரம் அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது தங்கதுரைக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய கல்யாணசுந்தரம் மற்றும் நிர்மல்குமாரை தேடி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE