பெண்களை அவதூறாக இணையதளத்தில் பதிவிட்ட யுடியூபர் கைது @ புதுச்சேரி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: பெண்களிடம் பேசியதை அவதூறு பரப்பும் வகையில் இணையதளம் உள்ளிட்டவற்றில் பதிவிட்ட தமிழகத்தைச் சேர்ந்த யுடியூபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பி.கே.விஜய் (எ) துர்க்கைராஜ். இவர் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலை ஆயிரக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பெண்களுடன் பழகியது, அவர்களுடன் நடத்திய உரையாடல்களை அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு மிரட்டுவதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, தன்னிடம் பிரச்சினை செய்த பெண்களது வீடியோக்களை அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு வந்ததாகவும், கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த பெண் துர்க்கைராஜ் மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏராளமான பெண்களிடம் பேசியதை அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

மேலும் தன்னை போலீஸார் பிடித்துப் பார்க்கட்டும், என சவால் விட்டும் அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து மதுரையில் தங்கியிருந்த துர்க்கைராஜை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து இன்று புதுச்சேரி அழைத்து வந்தனர். பின்னர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE