தீர்த்தமலை: கள்ளத் துப்பாக்கியால் மான் வேட்டையாடிய மூவருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் 

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி அருகே காப்புக்காட்டில், மானை வேட்டையாடி, கறி சமைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வனத்துறையினர் மொத்தம் ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டி காப்புக்காடு பகுதியில், வனச்சரகர் பெரியண்ணன் தலைமையில் வனத்துறையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப் பகுதியில், கள்ளத்துப்பாக்கியால் பெண் மான் ஒன்றை வேட்டையாடி, அதனை வெட்டி கறியாக்கிக் கொண்டிருந்த இருவரை, வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (32), ஆனந்த் (36) ஆகியோரிடம் இருந்து, மான் கறி, 2 நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் வனத்துறையினர் கைப்பற்றிய வனத்துறையினர் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மானை வேட்டையாடியவர்களிடம் இருந்து மான்கறியை வாங்கிச் சென்று சமைத்த காட்பாடி கிராமம் ஆசைத்தம்பி (42) என்பவரும் பிடிபட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர், மான் வேட்டையாடிய ரவிக்குமார், ஆனந்த் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும், மான் கறியை வாங்கிச் சமைத்த ஆசைத்தம்பிக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE