ராகுல் உடைக்கும் ரஃபேல் ரகசியம்!- கேள்விக்குறியாகும் தேசப் பாதுகாப்பு!

By காமதேனு

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான ராணுவ ஒப்பந்தம் ஒன்று தனியார் நிறுவனமான ரிலையன்ஸுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் மட்டுமே கோலோச்சி வந்த தனியார் நிறுவனங்கள் இனி பாதுகாப்புத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும். மத்திய அரசின் கொள்கை முடிவுகள் இதே ரீதியில் தொடருமானால் போர் விமானங்களை மட்டுமல்ல, வருங்காலத்தில் துப்பாக்கிகள், பீரங்கிகள், டாங்கிகள், கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள், நைட்ரஜன் மற்றும் அணுகுண்டுகளையுமேகூட உற்பத்தி செய்து சர்வ வல்லமை கொண்டதாக தனியார் நிறுவனங்கள் மாறலாம்!

இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களை முடிவு செய்வது கார்ப்பரேட் முதலாளிகள்தான் என்றாகிவிட்ட நிலையில், ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அதேசமயம் விஜய் மல்லையா, நீரவ் மோடி எனத் தலைமறைவாகும் முதலாளிகளைப் பிடிக்க முடியாத பாதுகாப்பு குறைபாடுகளைக்கொண்ட தேசத்தில், பாதுகாப்புத் துறையில் தனியாரை அனுமதிப்பது தேசப் பாதுகாப்பை நிச்சயம் கேள்விக்குறியாக்கும்!

இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களின் அஸ்தமனக் காலம் இது. தாராளமயமாக்கல் தொடங்கியபோதே அதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டாலும் இப்போது அது அழிவின் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல்., எஸ்.பி.ஐ., சேலம் உருக்காலை என உதாரணங்கள் ஏராளம். நிர்வாகச் சீர்கேடுகளால் அழிவைச் சந்திப்பது ஒரு ரகம் எனில் ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளால் அழிவைச் சந்திப்பது மற்றொரு ரகம். அந்த வகையில், ஆட்சியாளர்களின் கொள்கை முடிவால் மிகப் பெரிய துரோகத்தையும் நஷ்டத்தையும் சந்தித்திருக்கிறது ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்’ பொதுத் துறை நிறுவனம்.

ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்த நிறுவனம் தெற்காசியாவின் முதல் போர் விமானமான ‘ஹார்லோ-பிசி-5’யைத் தயாரித்த பெருமைக்குரியது. இன்றும் இந்த நிறுவனம் தனது வருவாயில் 40 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு விமானம், ஹெலிகாப்டர் மற்றும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தருவதன் மூலம் ஈட்டுகிறது. ரஷ்யாவின் சுகோய் கார்ப்பரேஷனின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பு, போயிங் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மிக் 29-கே விமானத்தின் ‘டர்போஃபேன்’ இன்ஜின் தயாரிப்பு இதிலெல்லாம் இந்த நிறுவனத்தின் பங்கு மிகப் பெரியது. சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், துருக்கி, மலேஷியா, நமீபியா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளை வாடிக்கையாளர்களாகப் பெற்ற ஆசியாவின் முன்னணி போர் தளவாட உற்பத்தி நிறுவனம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE