கொலைகார டாஸ்மாக்- தமிழக ஆட்சியாளர்கள் திருந்துவது எப்போது?

By காமதேனு

ஆள் அரவமற்ற அந்த நடுநிசியில் சிறுவன் தினேஷின் தற்கொலைத் தருணங்களை சராசரி மனிதர்களால் கற்பனை செய்யக்கூட இயலாது. அடர்ந்த இருளில் மேம்பாலத்தின் உச்சியிலிருந்து கழுத்தில் சுருக்கு மாட்டிக் குதித்துத் தொங்கி இருக்கிறான் தினேஷ். இவ்வளவு கொடூரமான தற்கொலை முடிவை நோக்கி அவனைத் தள்ளியது எது? அவனது வீட்டின் சூழல்தான்.

இங்கே, ஒவ்வொரு குடிநோயாளியின் வீடும் நரகம். மிகைப்படுத்தவில்லை, வேண்டுமெனில் நரகத்தைவிட கொடியதாக ஏதேனும் இருந்தால், அதனுடனும் பொருத்திக்கொள்ளலாம். குடிநோயாளியின் வீட்டில் ஒழுங்கு எதுவும் இருக்காது. அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி, சிரிப்பு இருக்காது. நகைகள் தொடங்கி பண்ட பாத்திரங்கள் வரை எதுவும் மிஞ்சாது. அறம் சார்ந்த விஷயங்களுக்கு அங்கே அறவே இடமில்லை. நல்ல சிந்தனைகள், மனம் திறந்த உரையாடல்களுக்கு இடமில்லை. எந்த நேரமும் குழந்தைகளின் அழுகைச் சத்தமும் பெண்கள் ஓலமும் வீட்டைச் சபித்திருக்கும்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதே பெரும்பாடு. அவர்கள் அணிந்துகொள்ள நல்ல உடை இருக்காது; உண்பதற்குச் சரியான உணவு கிடைக்காது. அக்கம்பக்கத்துக் குழந்தைகளைப் பார்த்து ஏங்கி ஏங்கியே அவர்களின் கண்கள் உள்ளடங்கிப்போயிருக்கும். பெரும்பாலும் அவமானத்தையும் அவநம்பிக்கையுமே சுமக்கும் அந்தக் குழந்தைகளின் சிந்தனைகளும் எதிர்மறையாகவும் தன்னிரக்கம் சூழ்ந்தும் இருக்கும். இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால், துர்நாற்றமும் வசவோடிய வார்த்தைகளின் இரைச்சலும் நிறைந்த தமிழக அரசின் மதுக்கடை ‘பார்’களுக்கும் குடிநோயாளிகளின் வீடுகளுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE