‘இவ்வளவு வேகமாகக்கூட ஒரு விசாரணை நடக்குமா?’ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சுழன்றுகொண்டிருக்கிறார்கள் சிபிசிஐடி போலீஸார். கல்வித்துறையில் உயர் பொறுப்பு வகிப்பவர்களுக்காக, கல்லூரி மாணவிகளைப் பேராசிரியை நிர்மலா தேவி ‘அழைத்த’ ஆடியோ, மார்ச் 19-ம் தேதியே கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு போகப்பட்டுவிட்டது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ‘அருப்புக்கோட்டை அரண்கள்’ என்ற முகநூல் பக்கத்தில் வெளியான பிறகே அது பூதாகரமானது.
ஏப்ரல் 16-ம் தேதி, நிர்மலா கைது செய்யப்பட, ராஜ்பவன் தரப்பு ‘அக்னி பிரவேசமாக’ அன்றைய தினமே, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மறுநாளே வழக்கை அருப்புக்கோட்டை போலீஸிடம் இருந்து சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றியது காவல்துறை. ஆளும் அரசுத் தரப்பிலிருந்து சிபிசிஐடி-யும், ஆளுநர் தரப்பிலிருந்து சந்தானம் குழுவும், ‘நிர்மலாதேவி விவகாரத்தில் யாரைப் பற்றி எல்லாம் ஆதாரம் இருக்கிறது? எந்த மட்டம் வரையில் சிக்கல் வலுக்க வாய்ப்பு இருக்கிறது?’ என்று இருவித கோணங்களில் தகவல் திரட்டி வருகிறார்கள்.
நிர்மலாதேவி பணிபுரிந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், காமராசர் பல்கலைக்கழக அதிகாரிகள், நிர்மலாவுடன் செல்போனில் உரையாடிய மாணவிகள், அவருடன் அடிக்கடி அதிக நேரம் செல்போனில் பேசியவர்கள், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் என ஐம்பதுக்கும் அதிகமானோரிடம் விசாரித்திருக்கிறது சிபிசிஐடி போலீஸ். சிறையிலிருந்த நிர்மலாவையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தார்கள்.
ஏற்கெனவே நிர்மலாவின் செல்போன்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றிய சிபிசிஐடி போலீஸார், விசாரணைக்குப் பிறகு அவரிடமிருந்து மேலும் சில விவரங்களைக் கறந்தனர். நிர்மலாவின் வீட்டிலும் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், புகைப்படங்கள், டைரி உள்ளிட்ட ஆதாரங்களைக் கைப்பற்றினர்.