இளையராஜாவுக்கு ஜூன் 2ல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றியதற்காக இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த செல்வதற்கு முன்பு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து கூறினார். இதனையடுத்து சிம்பொனி நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்ற இளையராஜா, முதல்வர் தன்னை வாழ்த்தி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், "லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!" என குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE