இளையராஜா - மோடி சந்திப்பும், நெகிழ்ச்சிப் பகிர்வுகளும்!

By ப்ரியன்

பிரதமர் மோடியும் இசைமைப்பாளர் இளையராஜாவும் சந்தித்துப் பேசினர். இது குறித்து இருவரும் நெகிழ்ச்சியான பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இசை மேதையும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அனைத்து வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.

லண்டனில் தமது முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான ‘வேலியன்ட்’டை அரங்கேற்றியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்தார். இந்நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் நடத்தப்பட்டது.

இந்த சாதனை அவரது இணையற்ற இசை பயணத்தில் மற்றுமொரு அத்தியாயத்தை குறிக்கிறது - இது உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை எடுத்துக்காட்டுகிறது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இளையராஜ தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடியுடனான ஒரு மறக்கமுடியாத சந்திப்பு இது. எனது சிம்பொனி "வேலியண்ட்" உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டுக்கும், ஆதரவுக்கும் பணிகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையை லண்டனில் கடந்த 9-ம் தேதி அரங்கேற்றினார். ஆசியாவிலிருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE