Top 5 Cine Bits: கங்கனா ‘ஆஸ்கர்’ கொந்தளிப்பு முதல் மம்மூட்டி ஹெல்த் வரை

By ப்ரியன்

கங்கனா ரனாவத் கொந்தளிப்பு: ஜனவரி மாதம் ரிலீஸான ‘எமர்ஜென்சி’ படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர், “என்ன ஒரு படம். இது இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். அதற்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் எதிர்வினையாற்றி உள்ளார் கங்கனா ரனாவத்.

“அமெரிக்கா அதன் உண்மையான முகத்தை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை, வளரும் நாடுகளை எவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்கள், அடக்குகிறார்கள் என்பதை எமர்ஜென்சி படத்தில் அம்பலப்படுத்தி உள்ளோம். அதனால், தங்கள் முட்டாள்தனமான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்திருக்கட்டும். நமக்குத் தேசிய விருதுகள் இருக்கின்றன” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார் கங்கனா.

‘கோர்ட்’ வசூல் வேட்டை: நடிகர் நானி தயாரிப்பில் மார்ச் 14-ம் தேதி வெளியான படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. இப்படம் முதல் 3 நாட்களில் ரூ.24.4 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் வெற்றிக்கான சந்திப்பில் நானி பேசும்போது, ‘ஹிட்’ படங்கள் போலவே அடுத்தடுத்த வழக்குகளை வைத்து ‘கோர்ட்’ படங்கள் வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை நானி தயாரித்துள்ளார்.

சிக்கலில் ‘பரமசிவன் பாத்திமா’ - இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா’. சில தினங்களுக்கு முன்பு இதன் ட்ரெய்லரை சீமான், அண்ணாமலை இணைந்து வெளியிட்டனர். அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கின.

கிறிஸ்துவ மதமாற்றத்தை பின்னணியாக கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் தணிக்கையில் சில காட்சிகள், வசனங்களை நீக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டார்கள். இதை செய்தால் மட்டுமே தணிக்கை செய்யமுடியும் என கூறியிருக்கிறார்கள். இதனால், மும்பையில் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு.

மீண்டும் ‘குட் பேட் அக்லி’ கூட்டணி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. தற்போது திரையரங்க ஒப்பந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு 9-ம் தேதி இரவே ப்ரீமியர் காட்சிகளை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.

இதனிடையே, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதற்காக கதை விவாதப் பணிகளை, ‘குட் பேட் அக்லி’ பட வெளியீட்டுக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் தொடங்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகவில்லை.

மம்மூட்டி உடல்நிலை வதந்தி: மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லால், நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார் மம்மூட்டி. இந்நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதனால் அவர் ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், இந்தத் தகவலை மம்மூட்டி தரப்பு மறுத்துள்ளது.

“அந்தச் செய்தியில் உண்மையில்லை. ரமலான் நோன்பு இருப்பதால் மம்மூட்டி, விடுமுறையில் இருக்கிறார். படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. விடுமுறைக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில்மோகன் லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்” என்று மம்மூட்டி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE