நடிகை பிந்து கோஷ் காலமானார்

By KU BUREAU

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக இருந்தவர் பிந்து கோஷ் (76). நடனக் கலைஞராக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமான அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உட்பட பலரின் படங்களில் பணியாற்றியுள்ளார்.

பின்னர் ‘கோழி கூவுது’ படம் மூலம் நடிகையானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். உருவங்கள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, விடுதலை ஆகிய படங்களில் இவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்தார். மருத்துவச் செலவுக்குக் கூட பண வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அவர் பேட்டிகளில் கூறியிருந்தார். அவருக்கு நடிகர்கள் சிலர் உதவியிருந்தனர். இந்நிலையில் பிந்து கோஷ் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. அவர் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த பிந்து கோஷுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE