“விஜய் களப்பணியுடன் மக்களை சந்திக்க வேண்டும்” - இயக்குநர் பேரரசு கருத்து

By கி.பார்த்திபன்

ஈரோடு: தவெக தலைவர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கலாம். மிரட்டல் காரணமாக இருக்காது என திரைப்பட இயக்குநர் பேரரசு தெரிவித்தார்.

ஈரோட்டிற்கு திரைப்பட இயக்குநர் பேரரசு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சினிமா துறையில் தற்போது சின்ன படங்கள் அதிகளவில் வந்து வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக லப்பர் பந்து, குடும்பஸ்தன் போன்ற படங்கள் வெற்றி பெறுவது ஆரோக்கியமாக உள்ளது.

நடிகர் விஜய் கட்சியை தொடங்கி அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்னும் களப்பணியாற்றி மக்களை சந்திக்க வேண்டும். மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அவர் தெரிவிக்க வேண்டும். மக்கள் நம்பிக்கை பெற அவர் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

விஜய் தைரியமாக தெளிவாக இருக்கிறார். விஜய் அரசியல் தலைவர் மட்டுமின்றி அவர் முன்னணி நடிகராக உள்ளார். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் பொது இடத்தில் அவரை காண ரசிகர்கள் கூடுவர். எனவே அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கலாம். மற்றபடி அவருக்கு மிரட்டல் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

விஜய் எப்படி இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினாரோ அதுபோல் துணை முதல்வராக உள்ள உதயநிதி இனிமேல் பட தயாரிப்பில் ஈடுபட மாட்டேன் என்று கூறவேண்டும். சின்னத்திரை சினிமாத்துறையில் தற்போது தற்கொலைகள் அதிகமாக நடக்கிறது. இது வேதனை அளிக்கிறது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை தைரியமாக எதிர் கொண்டு பிரச்சனையை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.

தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வாகாது. இன்னும் இரண்டு மாதத்தில் புதிய படம் இயக்க உள்ளேன். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படம் கமர்ஷியலாக இல்லாமல் சமூகப் பிரச்சினை கூறும் படமாக இருக்கும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை முன்பிருந்ததை விட தற்போது அதிகரித்து உள்ளது. எல்லாத் துறையிலும் பெண்கள் பிரச்சினை சந்திக்கின்றனர். இதற்கு சட்டங்கள், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE