பெண்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘ராபர்’. கவிதா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யா, டேனி, ஜெ.பி., தீபா, பாண்டியன், சென்றாயன், நிஷாந்த் என பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனத்தை ‘மெட்ரோ’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார். பாண்டி இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கூறும்போது, “ஒரு திருடனைப் பற்றிய கதையை ‘மெட்ரோ’ படத்தில் சொல்லியிருந்தேன். அவன் முகத்தை மூடிக் கொண்டு, திருடிவிட்டு போவான். ஆனால், ராபர் என்பவன் நின்று பயத்தைக் காட்டி, துன்புறுத்தி நகையைத் திருடி செல்வான். இது தான் திருடனுக்கும் ராபருக்கும் உள்ள வேறுபாடு. நாயகனின் பேராசை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே இந்த படம்” என்றார்.