Top 5 Cine Bits: ‘குட் பேட் அக்லி’ ரிஸ்க் முதல் பூஜாவின் ‘ரெட்ரோ’ முயற்சி வரை!

By ப்ரியன்

‘குட் பேட் அக்லி’ ரிஸ்க்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி இரவே ப்ரீமியர் காட்சிகளை திரையிட முடிவு செய்திருக்கிறார் படத்தின் விநியோகஸ்தர் ராகுல். ரிலீஸ் தேதிக்கு முன்பே படம் திரையிடப்பட்டால், அது வசூலை பாதிக்கும் என்ற கணிப்புகளை உடைக்கும் விதமாக அவர் ரிஸ்க் எடுக்கிறார். இந்த முடிவு மிகவும் தைரியமானதாக திரை வர்த்தகர்களால் பார்க்கப்படுகிறது.

ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு கோரிக்கை: நடிகை ராஷ்மிகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, அவர் சார்ந்த கொடவா சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து மத்திய மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நந்திநேர்வந்த நாச்சப்பா அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சமூக பின்னணி காரணமாகவே ராஷ்மிகா குறிவைத்துத் தாக்கப்படுகிறார். தேவையற்ற அரசியல் விவாதங்களுக்குள் ராஷ்மிகாவை இழுத்து, மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா பேசும்போது, “பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மந்தனாவுக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நேரமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?” என்று ஆவேசமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

காதலரை கரம் பிடிக்கும் அபிநயா: ‘நாடோடிகள்’ மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் மலையாளத்தில் ‘பணி’ வரை தன் நடிப்பாற்றலால் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது நீண்ட நாள் காதலை கரம் பிடிக்கும் அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “Ring the bells, count the blessings - forever starts today! #Engaged #BellsAndBlessings” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

‘மாம் 2’ அப்டேட்: நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், “ஸ்ரீதேவி நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மாம்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. அதில் என் மகள் குஷி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். குஷியும் ஜான்வியும் அவர்களது அம்மாவைப் பின்பற்றுகிறார்கள். ஸ்ரீதேவியின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் எண்ணமில்லை” என்றார்.

பூஜாவின் ‘ரெட்ரோ’ முயற்சி: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து மே 1-ல் வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இப்படத்துக்காக முதன்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார் பூஜா ஹெக்டே. மாநில மொழி படங்களில் முதன்முறையாக ‘ரெட்ரோ’ படத்துக்காக இந்த முயற்சியை அவர் எடுத்துள்ளார். ‘ரெட்ரோ’ கதையை கேட்டவுடன், இதற்காக தமிழ் வசனங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து நடித்த பூஜா ஹெக்டேவின் சொந்தக் குரல் டப்பிங் மீது படக்குழுவும் நம்பிக்கை வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE