நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அடுத்த பாகம் ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற பெயரில் உருவாகிறது. இதை சுந்தர்.சி இயக்குகிறார். நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். கன்னட நடிகர் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஐவி என்டர்டெயின்மென்ட் அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் தொடக்கவிழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் விழா நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சுந்தர்.சி, நயன்தாரா, ஹிப் ஹாப் ஆதி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், குஷ்பு, யோகிபாபு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் முதல் பாகத்துக்காக நயன்தாரா விரதம் இருந்தார். அதே போல இதன் இரண்டாம் பாகத்துக்காகவும் கடந்த ஒரு மாதமாக நயன்தாரா விரதம் இருந்து வருகிறார். அவர் மட்டுமில்லாமல் அவர் வீட்டில் அனைவரும் விரதம் இருக்கிறார்கள். இந்தப் படம் பரபரப்பான ஆக் ஷன், வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்த படமாக உருவாகிறது” என்றார்.