‘வாடிவாசல்’ அப்டேட்: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘வாடிவாசல்’. ‘விடுதலை’ படத்தின் 2 பாகம் மாற்றம், படப்பிடிப்பு உள்ளிட்ட தாமதத்தினால், ‘வாடிவாசல்’ தாமதமானது. தற்போது ‘வாடிவாசல்’ பணிகளைத்தான் முழுமையாக கவனித்து வருகிறார் வெற்றிமாறன். ஆனால், எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், “மே அல்லது ஜூன் மாதத்தில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். தற்போது முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று வெற்றிமாறன் அப்டேட் தந்துள்ளார்.
‘கூலி’ அப்டேட்: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சவுபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னையில் ‘கூலி’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, பிரம்மாண்டமாக பாடல் ஒன்றை படமாக்கியுள்ளது படக்குழு. இதில் ரஜினியுடன் நடனமாடி இருக்கிறார் பூஜா ஹெக்டே. படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே பூஜா ஹெக்டே வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ இப்பாடலும் ஹிட்டடிக்கலாம் என படக்குழு நம்புகிறது.
மார்ச் மாதத்துடன் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட ‘கூலி’ படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘லக்கி பாஸ்கர்’ சாதனை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு படம் ‘லக்கி பாஸ்கர்’. மீனாட்சி சவுத்ரி, ராம்கி முதலானோர் நடிப்பில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ல் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நெட்ப்ஃளிக்ஸ் டாப் 10 ட்ரெண்டிங்கில் தொடர்ச்சியாக 13 வாரங்கள் இடம்பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது ‘லக்கி பாஸ்கர்’.
மே 1-ல் ‘துருவ நட்சத்திரம்’? - கவுதம் மேனன் இயக்கிய படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரீத்து வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பல்வேறு பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாகவே ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருந்தது. சமீபத்திய ‘மதகஜராஜா’ வெற்றிக்குப் பிறகு, ‘துருவ நட்சத்திரம்’ பிரச்சினைகளிலும் சுமுகத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, மே 1-ம் தேதி ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாக வாய்ப்பு கூடியுள்ளது. அன்றைய தினம்தான் சூர்யாவின் ‘ரெட்ரோ’ வெளியாவது குறிப்பிடத்தக்கது.
‘குதூகல’ கயாடு லோஹர்: ‘டிராகன்’ படம் மூலம் கிடைத்துள்ள வரவேற்பு, நெட்டிசன்கள் கொண்டாடி வருவது, அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் குவிவது உள்ளிட்ட காரணங்களால் குதூகுலத்தில் உள்ள நடிகை கயாடு லோஹர் நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு பகிர்ந்த வீடியோ பதிவும் வைரல் ஆகியுள்ளது.
அதில், “எனக்கும், டிராகன் படத்துக்கும், இந்த பல்லவிக்கும் கிடைக்கும் அன்பும் ஆதரவும் உணர்வுபூர்வமானது. தியேட்டரில் நீங்கள் எனக்காக அடிக்கும் விசில், இன்ஸ்டாவில் நீங்கள் எனக்காக செய்யும் ரீல்ஸ் எடிட்ஸ், அழகான கமென்ட்கள் அனைத்தையும் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் தமிழ்ப் பொண்ணு இல்லை. எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது. இதற்கு ஈடாக அன்பைத் திருப்பித் தரும் வகையிலேயே என் படங்கள் இருக்கும். நீங்கள் பெருமைப்படும் வகையில் நடந்துகொள்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் தமிழிலேயே பேசியிருக்கிறார் கயாடு லோஹர்.