அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இதில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. “ஏகே ஒரு ரெட் டிராகன்... அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான்னா, அவன் மூச்சுலயே முடிச்சுடுவான்” என்ற பில்டப் வசனம் கேஜிஎஃப் படத்தை நினைவூட்டியது.
“நாம எவ்ளோ ‘குட்’டா இருந்தாலும்... இந்த உலகம் நம்மள ‘பேட்’ ஆக்குது” என்ற அஜித்தின் வசனமும் வெகுவாக ஈர்த்தது. இளமைத் தோற்றம், நடுத்தர வயது தோற்றம், டான் தோற்றம் என பல கெட்டப்களில் அஜித் தோன்றும் இந்த டீசர், ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்களைக் கவரும் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்பு கூடியுள்ளது.
வெள்ளிக்கிழமை 7 மணியளவில் வெளியான இந்த டீசர் முதல் 12 மணி நேரத்தில் மட்டும் 1.6 கோடி பார்வைகளைக் கடந்தது சாதனையாக கருதப்படுகிறது.