‘டிராகன்’ வசூல் நிலவரம்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து பிப்.21-ல் வெளியான ‘டிராகன்’ படம் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. முதல் இரு தினங்களில் மட்டும் உலக அளவில் ரூ.28 கோடி அளவில் வசூல் செய்த நிலையில், மூன்றாவது நாளில் அதிக எண்ணிக்கையிலான திரைகளுடன் ஹஃவுஸ் காட்சிகளை வசப்படுத்தியது.
இதனால், ரூ.35 கோடி அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘டிராகன்’ படம் முதல் மூன்று நாட்களிலேயே ரூ.40 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதையச் சூழலில் ‘டிராகன்’ விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தொடும் என்று வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
சந்தீப் கிஷன் மறுப்பு: ‘கூலி’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார் சந்தீப் கிஷன். தற்போது ‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் சந்தீப் கிஷன்.
இது தொடர்பாக சந்தீப் கிஷன் அளித்த விளக்கத்தில், “‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை. லோகேஷ் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் பெரிதாக பேசிக் கொள்வதில்லை என்றாலும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். ‘கூலி’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்றிருந்தேன். ரஜினி சாரை சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். அப்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டவுடன் அனைவரும் அப்படத்தில் நடிப்பதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள். ரஜினி சாரை சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்” என்று கூறியிருக்கிறார்.
‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ இந்தி ரீமேக் அப்டேட்: தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’. உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதனை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. இதில் வெங்கடேஷ் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மார்ச் 1-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’, அதே நாளில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
‘ராமாயணா’ படப்பிடிப்பில் யஷ்: 2024-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் ‘ராமாயணா’. இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தற்போது இதில் ராவணனாக நடிக்கும் யஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். சாய் பல்லவி, சீதையாக நடிக்கிறார். ராவணனாக யஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் படம் உருவாகிறது. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இதைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாளவிகா மோகனன் தந்த அப்டேட்: தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். ‘த ராஜா சாப்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் அவர், “நான் இதுவரை நடிக்காத ஹாரர் காமெடி வகை படம் இது. பெரும்பாலான கதை படங்களில் ஹீரோ கதாபாத்திரம் பெரியதாகவும், நாயகிக்குக் குறைவான காட்சிகளும் இருக்கும். ஆனால், ‘தி ராஜா சாப்’ படத்தில் அப்படியில்லை. படம் முழுவதும் வருகிறேன். எனது கதாபாத்திரத்துக்கு அருமையான காட்சிகளும் உள்ளன.
ஒரு பிரம்மாண்ட படத்தில் இப்படி ஒரு கேரக்டர் அமைவது. எப்போதாவதுதான் நடக்கும். அந்தக் கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் மாருதி இனிமையானவர். நான் பாகுபலி படத்தின் மிகப் பெரிய ரசிகை. அதனால் பிரபாஸுடன் இணைந்து நடிக்கவும் விரும்பினேன். இந்த வாய்ப்பு வந்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.