டிராகன்: ப்ளஸ், மைனஸ் என்னென்ன? - முழுமையான பார்வை

By ப்ரியன்

’ஓ மை கடவுளே’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து - ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் காம்போவில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள ‘டிராகன்’ படத்தின் ப்ளஸ், மைனஸ் விமர்சனம் இது...

ட்ரெய்லரில் எழுந்த சந்தேகம் போலவே படத்தின் ஆரம்ப காட்சிகள் சில சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தை நினைவூட்டியது மைனஸ் என்றாலும், மையக் கதைக்குள் நுழைந்த பிறகு திரைக்கதை வேகமெடுப்பது பெரிய ப்ளஸ்.

துவக்கத்தில் கொஞ்சம் ‘கிரிஞ்ச்’தனம் எட்டிப் பார்ப்பது மைனஸ் என்றாலும், அதன்பின் ஒருபக்கம் ஜாலி, இன்னொரு பக்கம் எமோஷனல் என தொய்வின்றி எங்கேஜ் செய்து அட்டகாச திரை விருந்து படைப்பது குறிப்பிடத்தக்க ப்ளஸ்.

பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் தொடங்கி கவுதம் மேனன், மிஷ்கின் வரை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் கச்சிதமாக இருப்பது ப்ளஸ்.

முந்தைய படத்தின் சாயலின்றி பிரதீப் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியது, நாயகனுக்கு இணையாக மிஷ்கின் ஈர்த்தது, அழுத்தமான கதாபாத்திரத்தை அனுபாமா கையாண்டது, தன்னுடைய பங்களிப்பை கயாடு லோஹர் சிறப்பாகச் செய்தது எல்லாமே ப்ளஸ்தான்.

விஜே சித்து, ஹர்ஷத் கானை மிகச் சிறப்பாக பயன்படுத்தியது, ஜார்ஜ் மரியான் வழக்கமான அசத்தல் பிரசன்ஸ், கவனம் ஈர்க்கும் கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமாரின் வருகை என ப்ளஸ்கள் கூடுகின்றன.

லியோன் ஜேம்ஸின் இதமான இசையும், நிகேத் பொம்மியின் வண்ணமயமான ஒளிப்பதிவும் மிகப் பெரிய பலம் பொருந்திய ப்ளஸ்கள்.

இரண்டாம் பாதியில் சில இடங்களில் மட்டும் தொய்வு இருப்பது மைனஸ் என்றாலும், உணர்வுபூர்வமான அழுத்தமான காட்சிகளால் ரசிகர்களைக் கட்டிப்போடுவது ப்ளஸ்.

வழக்கமான கல்லூரி சண்டைக் காட்சி, ஒரே பாடலில் உச்சம் தொடும் உத்திகள் முதலானவை மைனஸ்தான் என்றாலும், மசாலாத்தனமின்றி கல்வியின் மகத்துவத்தை நோக்கிய படத்தின் நகர்வு பெரிய ப்ளஸ்.

ஒட்டுமொத்தமாக, 2கே கிட்ஸ் வாழ்வியலை அடிப்படையாக வைத்து, சமகாலத்துக்கு ஏற்ற வகையில் என்டர்டெயின்மென்ட் உடன் கூடிய இன்டென்ஸ் ஆன படத்தை அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் தந்திருப்பது வெற்றியை உறுதி செய்யும் ப்ளஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE