OTT diary: சார்பட்டா பரம்பரை - அரசியல் பின்புலம் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா!

By ப்ரியன்

தமிழில் தவிர்க்க முடியாத ஸ்போர்ட்ஸ் - பொலிட்டிகல் டிராமாவாக 2021-ல் வெளிவந்த படம்தான் ‘சார்பர்ட்டா பரம்பரை’. அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் இப்படம் குறித்த விரைவுப் பார்வை இது...

எழுபதுகளில், குத்துச் சண்டைப் போட்டிகளுக்கு புகழ்பெற்ற பகுதிதான் வடசென்னை. அங்கு, ஆங்கிலேயர்கள் உருவாக்கிய உத்திகளும் உள்வாங்கப்பட்ட ‘ஆங்கில குத்துச் சண்டை’ போட்டிகள் நடக்கின்றன. அவற்றில் சார்பட்டா - இடியாப்ப பரம்பரையினர் இடியும், மின்னலுமாக மோதிக்கொள்கின்றனர். வெற்றி, தோல்விகளை, இரு தரப்பினரும் மானப் பிரச்சினையாகப் பார்க்கின்றனர்.

ஒரு போட்டியில், இடியாப்ப பரம்பரை வீரர் வேம்புலியிடம், சார்பட்டா பரம்பரை வீரரான மீரான் ‘நாக் அவுட்’ ஆகிறார். அப்போது, சார்பட்டா பரம்பரையின் குருவான ரங்கன் வாத்தியாரை எதிர் அணியினர் சீண்ட, அவர் சவால் விடுகிறார். அவரை மானசீக குருவாக ஏற்ற கபிலன், குருவின் சவாலை நிறைவேற்ற களம் காண்கிறான். அப்போது, எதிர்பாராத அரசியல் சூழ்நிலை ஏற்பட, கபிலன் பங்கேற்ற போட்டி தடைபடுகிறது. பிறகு கபிலன் வாழ்க்கையில் என்ன நடந்தது, சார்பட்டா பரம்பரையின் சவாலும், பெருமையும் என்ன ஆனது என்பதே திரைக்கதை.

கதை நடக்கும் கால கட்டத்தின் அரசியல், திரைக்கதையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய கண்ணியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குத்துச் சண்டை போட்டிகளில் ஊடுருவியிருந்த இரு பெரிய திராவிடக் கட்சிகளின் அரசியல், கதாபாத்திரங்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நுட்பமாகவும், துணிவாகவும் தங்கள் தேவைக்கேற்ப எடுத்தாண்டுள்ளனர் திரைக்கதையை இணைந்து எழுதியுள்ள பா.ரஞ்சித் - தமிழ் பிரபா.

மது உருவாக்கும் வாழ்க்கைச் சிதைவு, எத்தனை சிறந்த திறமையாளனையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும் என்பதை சமூக அக்கறையுடன் இரண்டாம் பாதி முன்வைக்கிறது.

ஒரு மாஸ் கதாநாயகனுக்காக சவால், இயல்பான கதைக் களத்தில் அமைந்துவிட்டபோதும், வணிகப்படங்களில் ஊதிப் பெருக்கும் நாயக பிம்பம்போல அல்லாமல், கபிலனை அவனது இயல்பிலேயேவிட்ட இயக்குநர் ரஞ்சித்தை வெகுவாக பாராட்டலாம். கபிலன் எனும் முதன்மைக் கதாபாத்திரத்தை துலங்கச் செய்ய உருவாக்கப்பட்ட பல துணைக் கதாபாத்திரங்கள், காவிய முழுமையுடன் படைக்கப்பட்டிருப்பது இந்தப் படத்தை உயர்ந்த தரத்தில் வைத்துவிடுகிறது.

கதைக்குத் தேவையான அளவுக்கு கலை இயக்கத்தை கையாண்டுள்ளனர். குத்துச் சண்டையை அதற்குரியநுட்பங்கள் எளிதாக வெளிப்படும்படி படமாக்கியிருக்கும் முரளி.ஜி.யின் ஒளிப்பதிவு, படத்துக்கு முதுகெலும்பு. நேர்மையான வீரர்கள், கலையை ஆராதிக்கும் எளிய மக்களின் ஏகோபித்த ரசனை, பரம்பரைமானம் என்பதை சுய பகடிக்கு ஆளாக்குவது, காலகட்டத்தின் அரசியலை கச்சிதமாக கதையில் நுழைத்தது என ஆக்‌ஷனும் வாழ்க்கையும் கலந்த உணர்வுகளின் கலவைதான் பா.ரஞ்சித்தின் இந்த ‘சார்பட்டா பரம்பரை’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE