“சொந்த வீடு கட்டிய மகிழ்ச்சியை விட...” - சூர்யா உருக்கமான பகிர்வு

By ப்ரியன்

சொந்த வீடு கட்டிய சந்தோஷத்தை விட, இந்தக் கட்டிடம் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்று அகரம் கட்டிடம் திறப்பு விழாவில் சூர்யா தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தி.நகரில் ‘அகரம்’ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட அனைவருமே தங்களது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார். அகரம் அமைப்புக்கு என்று பிரத்யேகமாக புதிய பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சூர்யா பேசும்போது, “ஒரு சின்ன விதை தான் ஆலமரமாக இந்த இடத்துக்கு வந்துள்ளது. 2006-ம் ஆண்டு ‘கஜினி’ முடித்தவுடன் இவ்வளவு அன்பு கொடுத்த இந்த சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்போது இயக்குநர் ஞானவேல் கேட்ட கேள்வியின் தொடக்கமே இந்த ‘அகரம்’. அப்போது 10-க்கு 10 அறையில் தொடங்கினோம். பின்பு படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளது.

இப்போது 700 மாணவ - மாணவியர்களை படிக்க வைக்கிறோம். இதற்கு 10,000 விண்ணப்பங்கள் வருகின்றன. இந்த தேவைகள் மட்டும் குறையவே இல்லை. பணமில்லாமல் படிக்க முடியாமல் இப்பவும் நிறைய பேர் இருக்கிறார்கள். 20 வருடங்கள் கடந்துவிட்டாலும், இன்னும் 20 வருடங்கள் எங்களால் ஓட முடியும். அதற்கு காரணம் முன்னாள் மாணவர்கள் அமைத்துக் கொண்ட விஷயமே. அவர்கள் இந்த சமூகத்தை சார்ந்தே யோசிக்கிறார்கள்.

படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் இந்த இடம் உருவாக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். எனது வருமானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டிடம்தான் இது. நன்கொடைகள் அனைத்தையும் படிப்பு சார்ந்து மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய பேருடைய அன்பும், ஆதரவும் தேவைப்படுகிறது. பணம் மட்டுமன்றி நேரமும் தேவைப்படுகிறது.

இவ்வளவு காலங்கள் அகரம் நடந்துக் கொண்டிருப்பது தன்னார்வலார்களால் மட்டுமே. இது ஓர் அலுவலகமாக அல்லாமல், பலரும் புதுவித அனுபவம், சக்தியைக் கொடுக்கும் இடமாக இருக்கும். இங்கு நிறைய புத்தக வெளியீட்டு விழாக்கள், பயிற்சி பட்டறைகள், புத்தக வாசிப்புகள் நடக்கவுள்ளது. சொந்த வீடு கட்டிய சந்தோஷத்தை விட, இந்த கட்டிடம் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கிறது” என்று சூர்யா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE