Top 5 Cine Bits: சிவகார்த்திகேயனின் ‘சம்பள’ பேச்சு முதல் தமிழில் ஜான்வி கபூர் வரை

By ப்ரியன்

சிவகார்த்திகேயன் ஓபன் டாக்: ‘அமரன்’ 100 நாள் வெற்றி விழாவில் கமல் முன்னிலையில் பேசிய சிவகார்த்திகேயன், “எனக்கு சரியாக சம்பளம் வந்துவிட்டது சார். அதுவே தமிழ் சினிமாவில் அரிது. இங்குள்ள அன்பு அண்ணனுக்கு தெரியும். எனது படங்கள் வெளியாகும் முந்தைய நாள் அன்பு அண்ணன் அலுவலகத்தில் தான் இருப்பேன். சம்பளம் கொடுக்காமல் மட்டுமல்ல, பாதி சம்பளத்தையும் வாங்கிக் கொண்டும் போய்விடுகிறார்கள் சார். அதற்கு இங்கு 2-3 குரூப் இருக்கிறது. அப்படியெல்லாம் நடக்கும் இந்த காலகட்டத்தில், நீங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு தான் வந்திருப்பீர்கள்.

எனக்கு இது ஆச்சரியம் தான் சார். ஏனென்றால் படம் வெளியாவதற்கு 6 மாதத்திற்கு முன்பே முழுசம்பளத்தையும் கொடுத்து, அதை தாண்டி மரியாதையும் தெளிவாக கொடுத்தார்கள். இப்படியிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பார்த்து ரொம்பவே அரிது” என்று குறிப்பிட்டார் சிவகார்த்திகேயன்.

‘மார்கோ’ நாயகன் ஸ்டேட்மென்ட்: 2024-ம் ஆண்டு இறுதியில் மலையாளத்தில் வெளியாகி இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மார்கோ’. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தாலும், இதில் இடம்பெற்ற வன்முறைக் காட்சிகள் பெரும் சர்ச்சையையும் உருவாக்கியது. தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.

இதையொட்டி, ‘மார்கோ’ நாயகன் உன்னி முகுந்தன் கூறும்போது, “வன்முறை என்பது நமது வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருக்கிறது. அதை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், ‘மார்கோ’ படத்தில் சமூகத்தில் நடப்பதை 10% கூட காட்டவில்லை” என்றார்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் அபர்ணா: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்கு உட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை அபர்ணா பாலமுரளி இடம்பெற்றுள்ளார். இவருடன் இந்தி நடிகர் ரோஹித் சரஃபும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்தப் பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அபர்ணா பாலமுரளி, கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’, மலையாளத்தில் ‘கிஷ்கிந்தா காண்டம்’, ‘ருதிரம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் பகிரங்கம்: ‘டிராகன்’ படத்தின் வெளியீட்டு முந்தைய விழாவில் பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன் “சில பேர் என்னை அடிக்கவும் செய்கிறார்கள், அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏன், எதற்கு என்று அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒன்று தான் சொல்ல விரும்புகிறேன். ஒரு செடி வளரும் போது, ஒரு சிலர் இலை, காம்பு என்று பிய்த்து போட்டு செல்வார்கள். சிலர் செடியை மிதித்துவிட்டுச் செல்வார்கள். அந்த தருணத்தில் எல்லாம் செடியின் வேர் வளர்ந்து வலிமையாக உருவாகிக் கொண்டிருக்கும். அந்தச் செடி மட்டும் அப்போதைய வலியை எல்லாம் தாங்கிக் கொண்டால் அதற்குப் பின் அது பெரிய மரமாக வளர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நேரத்தில் அந்தச் செடிக்கு தண்ணீர் ஊற்றும் அனைவருக்கும் நன்றி” என்று பேசி பரபரப்பூட்டினார்.

தமிழ் வெப் தொடரில் ஜான்வி கபூர்: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தமிழில் புதிய வெப் தொடரை தயாரிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறது. இதனை பா.ரஞ்சித் தயாரித்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு கொடுக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரை ‘களவாணி’ படத்தினை இயக்கிய சற்குணம் இயக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜான்வி கபூர் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழில் அவருடைய நடிப்பில் உருவாகும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் எந்தவொரு படத்திலும் நடிக்க இதுவரை நடிக்க ஜான்வி கபூர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE