சினிமா தயாரிப்பாளர் தில்ராஜு வீட்டில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியான புஷ்பா-2 திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்ததாக அதனை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்தது. மேலும் நடிகர் விஜய் நடித்த வாரிசும் வசூலில் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று ராம்சரண் நடிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படமும் ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தையே கொடுத்ததாக கூறப்பட்டது.

இதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு தெலுங்கில் வெளியான நடிகர் வெங்கடேஷ் நடித்த ‘சங்கராந்தி கி ஒஸ்துன்னாம்’ படமும் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இந்தப் படங்களை தயாரித்த தில்ராஜு மற்றும் இவருக்கு திரைப்படம் எடுக்க பைனான்ஸ் உதவி செய்வதாக கூறப்படும் மேங்கோ மீடியா ஆகியோர் அதிகமான படங்களை தயாரிப்பது எப்படி? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இவர்கள் காட்டும் வருமான கணக்குகள் சரிதானா? என வருமான வரித் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக இவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 55 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளின் ஆவணங்கள் தில்ராஜுவிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.26 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர கடந்த 3 நாட்களாக தில்ராஜு மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், மேங்கோ மீடியா நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தில்ராஜுவின் மனைவி, மகள் ஆகியோரின் வங்கி லாக்கர்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதில் இந்த மூவர் காட்டும் வங்கிக் கணக்குகளில் பெரும் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, நோட்டீஸ் வழங்குவர் என தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE