கத்தி குத்து தாக்குதலுக்கு ஆளான சயீப் அலிகான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

By KU BUREAU

கத்தி குத்து தாக்குதலுக்கு ஆளான பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் (54) மருத்துவமனையிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜனவரி 16-ம் தேதி அதிகாலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சயீப் அலிகானை கத்தியால் தாக்கினார். இதில், அவருக்கு முதுகுத் தண்டுவடம் உட்பட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து , சயீப் அலிகான் உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை தேறியதையடுத்து நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடன் அவரது தாயார், நடிகை சர்மிளா தாக்குர் ஆகியோர் இருந்தனர். சயீப் அலிகானின் மனைவி கரீனா கபூர் நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருந்த நிலையில், டிஸ்சார்ஜுக்கு சிறிது நேரத்துக்கு முன்பாகவே அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஒரு வார காலம் முழுமையான ஓய்வில் இருக்க சயீப் அலிகானிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க பார்வையாளர்கள் சந்திப்பை தவிர்க்குமாறும் அலிகானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சயீப் அலிகானை தாக்கிய வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை முந்த்ராவில் உள்ள அலிகானின் வீட்டுக்கு நேற்று அழைத்து வந்த போலீஸார் குற்றம் நடந்தது எப்படி என்பதை நடித்துக் காட்டச்சொல்லி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE