காஞ்சிபுரம், பரந்தூரில் தவெக தலைவர் விஜய் விமான நிலையம் கொண்டு வருவதற்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களை சந்தித்து பேசினார். முன்னதாக பரப்புரை வாகனத்தில் நின்று பொதுமக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய விஜய், ”கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேலாக உங்கள் மண்ணுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போராட்டம் பற்றி குழந்தை ராகுல் பேசியது என் மனதை தொட்டுவிட்டது. உங்களுடன் தொடர்ந்து நான் நிற்பேன் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது. வீட்டிற்கு முக்கியம் பெரியவர்கள். அதேபோல, இந்த நாட்டுக்கு முக்கியம் உங்களைப் போன்ற விவசாயிகள் தான். அதனால் உங்கள் காலடி மண்ணைத் தொட்டு கும்பிட்டு என் பயணத்தைத் தொடங்க நினைத்தேன். அதனால்தான் இங்கு வந்தேன். என் களப்பயணத்தை உங்கள் ஆசீர்வாதத்துடன் இங்கிருந்து தொடங்குகிறேன்.
நம் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கையாக காலநிலை பாதுகாப்பு பற்றியும் பேசியிருந்தேன். இதை நான் இங்கு சொல்ல காரணம் ஓட்டரசியல் கிடையாது. விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானமும் அந்த மாநில மாநாட்டில் சொல்லியிருந்தேன். பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 13 நீர்நிலைகளை வீணடித்து வெள்ளக்காடாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இருந்தேன். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்பேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. நான் ஏர்போர்ட் வரவேண்டாம் என்று சொல்லவில்லை. இங்கு வரவேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இந்த பூமியில் வாழும் எல்லாம் உயிரினங்களையும் காலநிலை மாற்றம் அச்சுறுத்தி வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் சதுப்பு நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாக தான் இருக்கும். அரிட்டாப்பட்டி பகுதியில் டங்கஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து அரசு தீர்மானம் நிறைவேற்றியதை நான் வரவேற்கிறேன். அதே முடிவைத்தான் அரசு இங்கேயும் யோசித்திருக்க வேண்டும். இங்கே விமான நிலையம் அமைப்பதையும் தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. நீங்கள் ஆடும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். பாதிப்பு குறைவாக இருக்கும் இடத்தைப் பார்த்து விமான நிலையம் கொண்டு வாருங்கள். மறு ஆய்வு செய்யுங்கள்” என்றார்.