வீட்டை மறைத்த ஜல்லிக்கட்டு தடுப்பு; வெட்டி வீசிய பிரபல நடிகரின் மனைவி!

By KU BUREAU

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பிரபல எழுத்தாளர், நடிகர் வேல ராமமூர்த்தி வீட்டு வாசலை மறைத்து தடுப்புகள் அமைத்ததால் அதனை அவரது மனைவி வெட்டி வீசியதோடு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய முதல் ஜல்லிக்கட்டு போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் நடந்து முடிந்துள்ளன. பார்வையாளர்கள் அமரும் பகுதிகளில் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசல் அருகே இடதுபுறம் அமைந்துள்ள பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி வீட்டின் முன்பாகவும் இரு தினங்களுக்கு முன்பாகவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் அவரது வீட்டில் உள்ளவர்கள் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை உருவானது.

நேற்றைய தினம் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் இதுபோன்று தடுப்புகள் அமைக்கப்பட்டதால் இன்று காலை வேலராமமூர்த்தியினுடைய குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டிற்குள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வேல ராமமூர்த்தியின் மனைவி காளியம்மாள் வீட்டின் முன்பாக கட்டப்பட்டிருந்த கம்புகளை அரிவாளால் எடுத்து வெட்டத் தொடங்கினார். பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் வெட்டக்கூடாது என கூறிய நிலையில் அவர்களோடு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்றனர்.

குடியிருப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கூடாது என்ற வழிமுறைகள் உள்ள நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக குடியிருப்புகளை மறைத்து பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டதால் அதிகாரிகளுடன் குடியிருப்பு வாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி குடியிருப்பு பகுதிகள் உள்ள பகுதியில் நடத்தக் கூடாது என கூறி சமூக ஆர்வலர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE