'மதகஜராஜா’ - விமர்சனம்!

By KU BUREAU

பல வருடங்கள் கழித்து ’மதகஜராஜா’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டபோது சமூகவலைதளங்களில் இந்தளவுக்கு வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என இயக்குநர் சுந்தர்.சி படவிழாவில் தெரிவித்திருந்தார். விண்டேஜ் விஷால்- சந்தானம் கூட்டணி இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு எந்தளவுக்கு பிடித்திருக்கிறது, எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்துள்ளதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

கேபிள் டிவி நடத்துபவர் மதகஜராஜா (விஷால்). நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய ஹெட்மாஸ்டர் வீட்டு விழாவுக்கு கிளம்பி போகிறார். அங்கு தன் பள்ளி கால நண்பர்களான சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் இவர்களை சந்திக்கிறார். இதில் சந்தானத்துக்கு தன் மனைவியுடன் பிரச்சினை என்பதைத் தெரிந்து கொள்ளும் விஷால் அதை தலையிட்டு சரிசெய்து வைக்கிறார். இதுபோல, மற்ற நண்பர்களான நிதின் சத்யா, சடகோபன் ரமேஷூக்கும் அரசியல்பலம், அண்அலம் கொண்ட தொழிலதிபரான சோனு சூட்டால் பிரச்சினை என்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தீர்த்து வைப்பதாக சொல்கிறார். தன்னுடைய நண்பர்களுக்காக சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டரான விஷால் வில்லன் சோனு சூட்டை எதிர்த்து நண்பர்கள் பிரச்சினையை தீர்த்து வைத்தாரா? இதற்கிடையில் அஞ்சலியுடன் வந்த காதல் வந்து பிரேக்கப் என்ன ஆனது, வரலட்சுமிக்கு விஷாலை பிடித்திருந்ததே, அதுவும் என்ன ஆனது? என்ற விடை தெரியாத இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வதுதான் ‘மதகஜராஜா’ படத்துடைய கதை.

சுந்தர்.சி படங்கள் என்றாலே அலட்டல் இல்லாத வழக்கமான மசாலா கதை, சிரிக்க வைக்கும் காமெடி, இரண்டு ஹிட் பாடல்கள், தாராள கவர்ச்சி காட்டும் கதாநாயகிகள் என்ற டெம்ப்ளேட் தான் இந்தப் படத்திலும் காணக்கிடைக்கிறது. 12 வருடத்திற்கு முன்பு இயக்குநராக சுந்தர்.சி பீக்கில் இருந்தபோது எடுத்த படத்தில் தப்பாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. படத்தின் முதல் காட்சியே சந்தானத்தின் காமெடியுடன் தொடங்கி கலகலப்பை ஏற்படுத்துகிறது. காமெடியனாக சந்தானத்தை எவ்வளவு தூரம் ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள் என்பதை இந்தப் படம் பார்க்கும்போது புரிகிறது. அந்த அளவுக்கு தியேட்டர் வெடித்து சிரிக்கிறது. அவருடன் லொள்ளுசபா மனோகர்- மொட்ட ராஜேந்திரன் காம்பினேஷனில் வரும் காமெடியும் அசத்தல். வழக்கொழிந்த ஹீரோவின் அறிமுக காட்சி, ஹீரோ- ஹீரோயினுக்கு பார்த்ததும் வரும் லாஜிக் இல்லாத லவ் டிராக், நினைத்ததும் வரும் பாடல்கள் இதெல்லாம் முதல் பாதியில் சகித்துக் கொள்ள ஒரே காரணம் சந்தானம் காமெடிதான். ஆனால், அதே சந்தானம் மாமியார் வைத்து காமெடி என்ற பெயரில் செய்யக்கூடைய சில விஷயங்கள் எல்லாம் டூ மச் ரகம்.

படத்தில் வரலட்சுமி, அஞ்சலி என இரண்டு கதாநாயகிகள். காதல் என்ற பெயரில் ஹீரோவை சுற்றி வரும் கிளாமர் ஹீரோயின்ஸ். சில இடங்களில் இவர்களது கவர்ச்சியும் காட்சிகளும் எல்லை மீறி முகம் சுழிக்க வைக்கிறது. மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு என காலஞ்சென்ற நடிகர்களை மீண்டும் திரையில் பார்ப்பது நல்ல அனுபவம். மனோபாலா & மணிவண்ணன் இரண்டு பேரின் கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் அரசியல்வாதி நல்லமுத்துவாக மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையில் ’மை டியர் லவ்வர்’ மற்றும் ரயில் பாடல் தியேட்டர் மெட்டீரியல்.


படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் தெரிந்தாலும் படத்தை சகித்துக் கொள்ள முக்கிய காரணங்கள் நடிகர்களின் நடிப்பு, சந்தானம் & கோ காமெடி மற்றும் விஜய் ஆண்டனியின் இசை. மற்றபடி, பொங்கலுக்கு ரிலாக்ஸாக வீட்டில் இருந்து பொங்கல் சிறப்பு படங்களை பார்க்க விரும்பும் மனம் கொண்டவர்களுக்கு இந்த முறை தொலைக்காட்சியில் அல்லாமல் திரையரங்கிலேயே போட்டுக் காட்டுகிறோம் எனும்படியான படம் தான் ‘மதகஜராஜா’. தேவையில்லாத தாராள் கவர்ச்சி மற்றும் சில இரட்டை அர்த்த வசனங்களுக்காக இது குழந்தைகளுக்கான படம் இல்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE