திருச்சூர்: கடந்த 1944-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கேரளாவின் கொச்சி அருகேயுள்ள ரவிபுரம் பகுதியில் ஜெயச்சந்திரன் (80) பிறந்தார். கொச்சி மன்னர் பரம்பரையை சேர்ந்த அவரது குடும்பம் பின்னர் திருச்சூருக்கு இடம்பெயர்ந்தது.
சிறுவயது முதலே பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜெயச்சந்திரன் திரைப்பட பாடல்களை பாடி வந்தார். கடந்த 1965-ம் ஆண்டில் மலையாள திரைப்படம் ஒன்றில் முதல் பாடலை அவர் பாடினார். இதன்பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார்.
தமிழில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் காத்திருந்து, காத்திருந்து உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தேசிய திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன், கேரளாவின் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்றிரவு அவர் காலமானார்.