சென்னை: இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் இந்தப் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் ஐந்து பாடல்களுக்கு மட்டும் சுமார் ரூ. 75 கோடி செலவு செய்திருக்கிறார் ஷங்கர் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்3’ படத்திற்கான பணிகளை முடித்துக் கொடுக்காமல் ’கேம் சேஞ்சர்’ படத்தை வெளியிடக்கூடாது எனவும் ‘இந்தியன்3’ படத்தை முடித்துக் கொடுக்க மேலும் ரூ. 65 கோடி ஷங்கர் கேட்டதாகவும் தயாரிப்பு நிறுவனமான லைகா திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளது.
படத்தில் மீதமிருக்கும் காட்சிகள், பாடல்களை படமாக்காமல் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என இயக்குநர் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக திரையரங்க ஒப்பந்தம் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.