என் மாமனார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் - நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்!

By KU BUREAU

சென்னை: தன்னுடைய மாமனார் தன்னை நம்பி பெண் கொடுத்தது மட்டுமில்லாது தன் கனவையும் ஊக்குவித்தார் என நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்.

என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! தொலைக்காட்சியில் ஆங்கரிங் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய கனவை அடையவும் மனோகர் மாமா ஆதரவு கொடுத்தார். அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். யுவன் சார் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு சார் இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத் சாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும்.

யுவன் சார் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார். யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் சார். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE