தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - கங்கை அமரன் ஆவேசம்!

By KU BUREAU

சென்னை: எம்ஜிஆர் போன்று நடிகர் விஜய்யும் தன்னுடைய திரைப்படத்தில் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என புதுக்கோட்டையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பேட்டி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் வருகை தந்தார். அவரை அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகமுத்து வரவேற்று அம்பேத்கர் சிலையை பரிசளித்தார். இதன் பின்னர் கங்கை அமரன் செய்தியாளரிடம் பேசுகையில், “கடந்த காலங்களில் திரைப்படங்களில் நல்ல கதை இருந்தது. ஆனால், தற்போது வரும் திரைப்படங்களில் கதைக்கு இடமில்லை. அடி உதை குத்துக்கு தான் இடம். மக்கள் அதை நோக்கி சென்று விட்டனர். நான் ஏற்கனவே வைரமுத்துவை பேசிய நிலைப்பாட்டில் இருந்து என் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை,

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தவறுகளை தட்டி கேட்கும் நபராக அவர் மட்டுமே உள்ளார். அவர் முன் எடுத்துள்ள போராட்டங்கள் சரியானதே, தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, மது கலாச்சாரம், போதை கலாச்சாரம் பெருகி வருகிறது. போதை கலாச்சாரத்தால் படப்பிடிப்பு எடுக்கவே இடையூறாக உள்ளது. தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் இந்த விவகாரங்களில் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பட்டியலின சமூக மக்கள் இன்னும் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலை தான் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் கூட பட்டியல் இன மக்களுக்கான முழு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது செயல்பாடுகளை அனைவரும் எதிர்பார்ப்பதை போல் நானும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளியை காவல் துறையும் தமிழக அரசும் நினைத்தால் கைது செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் நினைக்கவில்லை.

அரசு இந்த விவகாரத்தை முடிக்க விரும்பவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிய தற்போதைய முதல்வர், ஆட்சிக்கு வந்த பிறகு மௌனமாக இருந்து வருகிறார். மேலும் போதை கலாச்சாரத்தையும் ஒழிப்போம் என்று தற்போது விளம்பரம் செய்து வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளி யார் என்றும், அவர் எதன் பின்னணியில் இதனை செய்தார் என்பது குறித்தும் தெளிவாக எடுத்து காண்பித்தும் அரசு அதை மறுக்கிறது. யாரை காப்பாற்றுவதற்காக அரசு இவ்வாறு செய்கிறது என்று தெரியவில்லை” எனப் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE