WELCOME 2025: 'கூலி’ டூ ‘தளபதி69’... எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் என்னென்ன?

By KU BUREAU

’தங்கலான்’, ’இந்தியன்2’, ‘கங்குவா’ என கடந்த வருடங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கொடுத்தது. கிட்டத்தட்ட ரூ. 1000 கோடி தமிழ் சினிமாவுக்கு நஷ்டம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வருடம் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

'கூலி’:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உருவாகி வருகிறது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ-விற்குள் இந்தப் படம் வர இருக்கிறது. அனிருத் இசையில் வெளியான ‘சிக்கிட்டு வைப்’ முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'தளபதி 69’:

நடிகர் விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ‘தளபதி 69’. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் அக்டோபரில் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

'விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’:

நடிகர் அஜித்தின் இரண்டு படங்களான ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்கள் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. ‘விடாமுயற்சி’ திரைப்படம் முதலில் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப் போனது. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தால் ‘குட் பேட் அக்லி’ படமும் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இன்னும் ரிலீஸ் தேதி குறிப்பிடாத இந்த இரண்டு படங்களும் இந்த வருடம் வெளியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘தக் லைஃப்’:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த வருடம் ஜூன் மாதம் வெளியாவதாக இந்தப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, கமலின் ‘இந்தியன்3’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

’வீர தீர சூரன்’:

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் இதில் நடித்திருக்கிறார்கள். ‘சித்தா’ பட இயக்குநர் அருண் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதன் இரண்டாம் பாகம் முதலில் வெளிவர இருக்கும் நிலையில், முதல் பாகம் அடுத்த வருடம் எதிர்பார்க்கலாம்.

‘எஸ்.கே.23’:

நடிகர் சிவகார்த்திகேயனின் 23ஆவது படமாக உருவாகி இருக்கிறது ‘எஸ்.கே.23’. நீண்ட நாட்கள் கழித்து சிவாகார்த்திகேயன் முருகதாஸ் தமிழில் படம் இயக்க இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE