சின்னதிரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை திருவான்மியூர், ராஜாஜி நகரில் வசித்து வந்தவர் காமராஜ்(64). காவல் துறையில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி 2019-ல் ஓய்வு பெற்றார். இவரது மகள் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் புகழின் உச்சியில் இருந்தபோது 2020-ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
ஹேம்நாத் விடுதலை: இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் ஹேம்நாத்தான் காரணம் என கூறி, நீதிமன்றத்தில் காமராஜ் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து ஹேம்நாத்தை நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. மகள் சித்ரா இறந்தது முதல் சோகத்தில் இருந்த காமராஜுக்கு ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனஉளைச்சலை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த டிச.9-ம் தேதி சித்ராவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மகளின் தற்கொலைக்கு காரணமான ஹேம்நாத்துக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லையே என்ற வருத்ததுடன் காமராஜ் இருந்துள்ளார். இந்நிலையில், காமராஜ் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் சித்ராவின் அறையில் தூங்கியுள்ளார். நேற்று காலை நெடுநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி விஜயா(62), அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது சித்ராவின் துப்பட்டாவால் தூக்கிட்டு காமராஜ் தற்கொலை செய்து கொண்டதை கண்டு, விஜயா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
» அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமான் கைது
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன.01, 2025
போலீஸார் விசாரணை: முகமது புகாரி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வநது, காமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சித்ராவின் தாயார் விஜயா கூறும்போது, ``திருவள்ளூர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்ததில் இருந்து எனது கணவர் மனஉளைச்சலில் சரியாக சாப்பிடாமல் இருந்து வந்தார். அதிகாலை 4 மணி வரை நன்றாகத்தான் இருந்தார். அதற்கு மேல்தான் சித்ரா அறையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்'' என்றார்.