REWIND 2024: இந்த ஆண்டில் ரீ-ரிலீஸில் கொண்டாடப்பட்ட படங்கள் என்னென்ன?

By KU BUREAU

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே காலத்தை தாண்டி என்றும் ரசிக்கப்படுபவையாக உள்ளது. இந்த ஆண்டு 2024ல் ‘வாரணம் ஆயிரம்’, ’விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘மயக்கம் என்ன’, ’கில்லி’ போன்ற பல படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின. அப்படி ரீ-ரிலீஸில் ஹிட்டடித்த படங்கள் இன்றைக்கும் ரசிகர்களை அசரடித்தன.

’கில்லி’: விஜய், த்ரிஷா,பிரகாஷ்ராஜ் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டிலே, 200 நாட்களுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது 'கில்லி'. இந்தப் படம் வெளியாகி 20 வருடங்களான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழகம் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் ஹிட் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.30 கோடி வசூல் செய்தது.

’மங்காத்தா’: நடிகர் அஜித்தின் ஐம்பதாவது படம் ’மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கத்தில் த்ரிஷா,அர்ஜூன்,ஆண்ட்ரியா,அஞ்சலி, பிரேம் ஜி என பலர் நடிப்பில் வெளியானது.அஜித்தின் வில்லத்தனமும் ,யுவன் சங்கர் ராஜாவின் மாஸ் இசையும் இன்றும் கொண்டாடப்படுபவை.13 ஆண்டுகளுக்கு பின் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று ரீ-ரிலிஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.14 லட்சம் வசூல் செய்தாக சொல்லப்படுகிறது.

’அழகி’: பள்ளிப்பருவ காதலியை திருமணத்துக்கு பிறகு சந்திக்கும் நாயகன் என்னும் கதைக்களத்தில் இயக்குநர் தங்கர் பச்சானின் படைப்பு ’அழகி’. பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி,விவேக்,மோனிகா என பலர் நடிப்பில் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது இத்திரைப்படம். அழுத்தமான கதைக்களமும் இளையராஜாவின் இசையும் படத்திற்கு பலம். 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கடந்த மார்ச் மாதம் ரீ-ரிலீஸ் ஆனது.

’குணா’: நடிகர்கள் கமல்ஹாசன், ஜனகராஜ், ரேகா உள்ளிட்டோர் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’குணா’.‍ இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'கண்மனி அன்போடு காதலன்' பாடலும் 'மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல' வசனமும் ரசிகர்களை ஈர்த்ததை தொடர்ந்து 33 வருடங்களுக்கு பின்பு மீண்டும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

’பருத்தி வீரன்’: நடிகர் கார்த்தியின் அறிமுகப் படம் ’பருத்திவீரன்’. அமீர் இயக்கத்தில் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE