REWIND 2024: டெல்லி கணேஷ் முதல் சேஷூ வரை; கலங்க வைத்த பிரபலங்களின் மறைவு!

By KU BUREAU

சென்னை: 2024 தமிழ் சினிமாவில் வெற்றிகள் தோல்விகள் என பல இருந்தாலும் பல பிரபலங்களின் மறைவு திரையுலகை துயரத்தில் ஆழ்த்தியது. இவர்கள் உலகை விட்டு மறைந்தாலும் நடிப்பு மற்றும் நினைவுகள் மூலம் திரையில் நிலைத்து நிற்கிறார்கள்.

நடிகை சி.ஐ.டி சகுந்தலா: சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா.
'சிஐடி சங்கர்’, 'படிக்காத மேதை’, 'கை கொடுத்த தெய்வம்’, 'வசந்த மாளிகை' உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் செப்.17 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டேனியல் பாலாஜி: சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து வில்லத்தனத்திற்கு பெயர் போனவர் டேனியல் பாலாஜி. ‘காக்க காக்க’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ’பொல்லாதவன்’, ‘வடசென்னை’, ‘பிகில்’ போன்ற படங்களில் நடித்தார். மாரடைப்பு காரணமாக மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் காலமானார். இறப்பிற்குப் பிறகு இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.

டெல்லி கணேஷ்: நாடகத்திலிருந்து திரைக்கு வந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் டெல்லி கணேஷ். சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன் நடிப்பால் மக்களிடம் கவனத்தை பெற்றவர். ‘பசி’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காம ராஜன்’, ‘அவ்வை சண்முகி’ போன்ற 400 மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் ,தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி என பல மொழிகளில் அசத்தியவர். நடிப்பிற்காக மாநில அரசு விருதும், கலைமாமணி விருதும் பெற்றார். நவம்பர் 9 ஆம் தேதி இரவு குடும்பத்தினரிடம் பேசிவிட்டு தூங்க சென்றவர் திடீரென உயிரிழந்தார்.

லொள்ளு சபா சேஷூ: ‘மண்ணெண்ண வேப்பென வெளக்கெண்ண, யார் ஜெயிச்சா எனக்கென்ன’ போன்ற நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் சேஷூ. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் பிரபலமானவர். ‘வேலாயுதம்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற படங்களில் மூலம் தன் நடிப்பில் முத்திரை பதித்தவர். இலவச திருமணம்,கல்வி ,மருத்துவம் என தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தவர் சேஷூ. உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.

பிஜிலி ரமேஷ்: யூடியூப் சேனலின் பிராங்க் வீடியோ மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ். ‘கோலமாவு கோகிலா’, ‘நட்பே துணை’ உள்ளிட்டப் படங்களில் நடித்தார். உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி உயிரிழந்தார்.

பிரதீப் கே.விஜயன்: ‘தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் பிரதீப் கே.விஜயன். பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும், நண்பர்களின் அழைப்பிற்கும் எந்த பதிலும் இல்லை என்றும், காவல் துறையினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE