மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிக்கு ஒரு ‘தளபதி’ அமைந்தது போல், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ‘ரெட்ரோ’ அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது அந்தப் படத்தின் டைட்டில் டீசர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என தலைப்பிட்டு டீசர் ஒன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
» கைவினைக் கலைஞர்களின் சரஸ் மேளா விற்பனை கண்காட்சி - துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!
» மதுரையில் வக்பு வாரிய அதிகாரிகளை கண்டித்து கோபுரத்தில் ஏறி போராட்டம்
முழுக்க காதலை மையப்படுத்திய படம் என்று கார்த்திக் சுப்பராஜ் ஏற்கெனவே குறிப்பிட்டதன்படியே, இந்த டைட்டில் டீசரிலும் சூர்யா - பூஜா ஹெக்டே இடையிலான காதல் காட்சியே மையம் என்றாலும், சூர்யாவின் காதல் வசனங்கள், பூஜா ஹெக்டேவின் ரியாக்ஷனுக்கு இடையே ரவுடியிசம், தாதாயிசம் தொடர்புடைய கதாபாத்திரங்களும், காட்சிகளும் வந்து செல்வது, ஆக்ஷனுக்கு அதிமுக்கியத்துவம் இருக்கும் என உணர வைக்கிறது.
தனது வன்முறை சூழ் வாழ்க்கையை விவரித்துவிட்டு, “காதலுக்காக எல்லாத்தையும் விட்டுறேன்... கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று சூர்யா கேட்க, ஆமோதித்து முத்தமிடுகிறார் பூஜா. ஆனால், அடுத்த ஷாட்டே கெத்தாக பார் ஒன்றில் வீற்றிருக்கிறார் சூர்யா.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி - மம்முட்டி நடித்த ‘தளபதி’ பட மூடில் லைட்டிங், லொக்கேஷன், காட்சி அமைப்புகள் மட்டுமின்றி வசனங்களும் இருப்பதால் கார்த்திக் சுப்பராஜ் பாணியில் சூர்யாவுக்கு இது ‘தளபதி’ ஆக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டைட்டில் டீசர் இதோ...