சென்னை: தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரோஸ்’ படம் முதல் ‘த்ரிஷ்யம் 3’ அப்டேட் வரை பல தகவல்களை நடிகர் மோகன்லால் பகிர்ந்துள்ளார்.
நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. 3டி-யில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட ஃபேன்டஸி படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், பின்னணி இசை அமைத்துள்ளார்.
நாளை (டிச.25) வெளியாகும் இந்தப் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அந்த விழாவில் மட்டுமின்றி, சென்னையில் பல்வேறு பேட்டிகளையும் மோகன்லால் அளித்துள்ளார். அவற்றில் மோகன்லால் பகிர்ந்த தகவல்கள்...
“திரைத்துறையில் 47 வருடமாக இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம் இது. ஃபேன்டஸி, அட்வென்சர் படம். முழுவதும் 3டி-யில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம் பிடித்துள்ளோம். இதில் முக்கியமான, திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து இரண்டு நடிகர்கள்தான் இதில் நடித்துள்ளனர். மற்றவர்கள் போர்ச்சுக்கல், ஸ்பெயின், ரஷ்ய நடிகர்கள் ஆவர். பிரிட்டீஷ் குழந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ஒரு மேஜிக் உலகுக்கு இந்தப்படம் அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை இந்தப் படம் உசுப்பிவிடும்.
ரஜினி உடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதை சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் உடனும் பணிபுரிந்துள்ளேன். ரஜினியுடன் நடிக்க ஒரு வாய்ப்பு ‘ஜெயிலர்’ மூலமே அமைந்தது.
ரஜினியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். எனது மாமனாருடைய பல படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக தெரிந்திருந்தாலும், அவருடன் பணிபுரிய வாய்ப்பு அமையவில்லை. ‘ஜெயிலர்’ வாய்ப்புதான் அமைந்தது. ‘பரோஸ்’ படத்துக்கு அழைத்திருந்தேன். அவர் ஜெய்ப்பூரில் இருப்பதாக தெரிவித்தார். இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் எல்லாம் அனுப்பி வைப்பேன். அவர் இப்படத்தைக் காண ஆர்வமாக இருக்கிறார். கண்டிப்பாக ‘த்ரிஷ்யம் 3’ உருவாகும்” என்றார் மோகன்லால்.