‘விடுதலை2’ திரை விமர்சனம்!

By KU BUREAU

சென்னை: துணைவன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் தாக்கம் இரண்டாவது பாகத்திலும் எதிரொலித்திருக்கிறதா, படம் எப்படி உள்ளது என்ற விமர்சனம் இதில் பார்க்கலாம்.

முதல் பாகத்தில் மக்களுக்கு எதிராக அதிகார வர்க்கம் கிளப்பும் பிரச்சினைகளை எதிர்த்து மக்கள் படை தன் எதிர்ப்பை பதிவு செய்யும். மக்கள் படைத்தலைவரான பெருமாள் வாத்தியாரை பிடிப்பது காவல்துறைக்கு சவாலான விஷயமாக அமையும். அதைத்தாண்டி, பெருமாள் வாத்தியாரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தும். அதில் பெருமாள் வாத்தியார் தன்னைப் பற்றியும் மக்கள் படை பற்றியும் சொல்வதோடு முதல் பாகம் முடிவடையும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கிறது. அதாவது, இந்த பாகத்தில் மக்கள் படை உருவான கதை, கம்யூனிச பாதையை வாத்தியார் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? காவல்துறைக்கும் மக்கள் படைக்கும் நடக்கும் மோதலில் ஜெயித்தது யார்? பெருமாள் வாத்தியாருக்கு என்ன ஆயிற்று இது போன்ற கேள்விகளுக்கான பதில்தான் ’விடுதலை பாகம்2’.

பெருமாள் வாத்தியாராக படம் முழுக்க நிறைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பள்ளியில் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் சாதாரண வாத்தியாராக தொடங்கி மக்கள் படை தலைவராக அவர் மாறுவதற்கான காலம் வரை நடிப்பில் தன் முதிர்ச்சியை காட்டியிருக்கிறார். கம்யூனிச பாதையை அவர் தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்த அந்த ஒரு சம்பவத்தை படத்தின் தொடக்கத்திலேயே காட்டி பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்கள். சிறிய கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார் கென். பிளாஷ்பேக் போர்ஷனில் விஜய்சேதுபதியின் மேக்கப்பும், விக்கும் தனியாக துருத்திக் கொண்டிருக்கிறது.

அதேபோல, பல இடங்களில் லிப்சிங்க் மிஸ் ஆவது மைனஸ். மற்றபடி நடிகர்கள் சூரி, மஞ்சுவாரியர், சேத்தன், ராஜீவ் மேனன் என தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தின் கதை முழுக்கவே பெருமாள் வாத்தியாரை சுற்றியே நகர்வதால் முதல் பாகத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட சூரி, கெளதம் மேனன், சேத்தன் கதாபாத்திரங்களுக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் இரண்டாம் பாகத்தில் குறைவாக உள்ளது.

மஞ்சு வாரியர் கதாபாத்திரம் ஆரம்பத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என களம் கண்டாலும் பெருமாள் வாத்தியாருடனான திருமணத்திற்குப் பிறகு குடும்பம், குழந்தை என சுருங்கி விடுகிறது அல்லது அவருக்கான அழுத்தமான காட்சிகள் குறைவு என்பது ஏமாற்றம். பட்டியலின மக்கள் மீது நடக்கும் வன்முறை, அதற்கு அவர்களது எதிர்வினை, பட்டியல் சாதியினர் உயர்சாதி பெண்களை காதலிக்கும்போது வைக்கப்படும் விமர்சனத்திற்கான பதில், அதிகார துஷ்பிரயோகம் போன்ற விஷயங்களை சமரசமில்லாத திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.

இளையராஜாவுடைய பின்னணி இசையும், தெனம் தெனமும் பாடலும் இதம். ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் சூழலுக்கேற்ப அவர்களுடைய மனமாற்றமும் காட்சிப்படுத்திய விதம் சுவாரஸ்யம். பல இடங்களில் விஜய்சேதுபதி பேசிக் கொண்டே இருப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. கதையை சுருக்கமாக முடிப்பதற்கான பல வாய்ப்புகள் இருந்தும் 2.45 மணி நேரம் இழுத்திருக்கிறார்கள். கடைசி நேரத்தில் குறைக்கப்பட்ட 8 நிமிட காட்சியால் ஆங்காங்கே காட்சிகள் முழுமை இல்லாமல் பிசிறு தட்டுகிறது. அதிகப்படியான வன்முறையால் இது குழந்தைகளுக்கான படம் இல்லை. ஆகமொத்தத்தில், முதல் பாகம் பிடித்தவர்களுக்கு இரண்டாம் பாகமும் பிடிக்கும். முதல் பாகம் பார்க்காமல் இரண்டாம் பாகம் பார்ப்பவர்களுக்கு பொறுமையை சோதிக்கும் படமாகவே இது அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE