இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருக்கும் ‘வணங்கான்’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா மற்றும் இயக்குநர் பாலா திரைக்கு வந்து 25 வருடங்கள் ஆனதை ஒட்டி பிரம்மாண்டமான விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, நடிகர்கள் அருண்விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
’வணங்கான்’ படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி பின்பு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சூர்யா- பாலா இடையிலான பிரச்சினைதான் முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், அது இல்லை என நிரூபிக்கும் வகையில் நேற்று நடந்த விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கிறார். மேடையில் அவர் பேசுகையில், “என்னுடைய வாழ்க்கையில் நான் சிகரெட் பிடித்ததே கிடையாது. ஆனால், இயக்குநர் பாலாவுக்காக ‘நந்தா’ பட ஷூட்டிங்கின் போது 300 முறை சிகரெட் பிடிக்க பழகினேன். அது ரோலக்ஸ் கதாபாத்திரம் வரை உதவியது. ‘நந்தா’ படத்திற்குப் பிறகுதான் ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்டப் படங்கள் வந்தது. எனக்கு வாய்ப்பு கொடுத்ததே பாலாதான். அவரை அண்ணன் என்று தான் அழைப்பேன்” என்றார்.