‘ராஜா ராணி’ மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அடுத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘ஜவான்’ படங்களை இயக்கியுள்ளார். இப்போது ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்தைத் தயாரித்துள்ளார். இது ‘தெறி’ படத்தின் ரீமேக். இதையடுத்து அவர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதை தற்போது அட்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “இதற்கான ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டோம். இது அதிக நேரத்தையும் சக்தியையும் எடுக்கும் படம். இந்தப் படத்தில் நடிகர்களின் பட்டியலை வைத்து ஆச்சரியப்படுத்த இருக்கிறேன். நான் ஆரவாரத்துக்காக இதைச் சொல்லவில்லை. உண்மையாகப் பேசுகிறேன். அந்தப் படம் நம் நாட்டின் பெருமைமிக்கப் படமாக இருக்கும். அதற்கு அதிக ஆசீர்வாதங்கள் வேண்டும். எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.