சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் கைது முதல் ஹேமா கமிட்டி வரை இந்த வருடம் சினிமாத் துறையில் பல விஷயங்கள் பேசுபொருளாகி இருக்கிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நடிகர் அல்லு அர்ஜுன் கைது: ‘புஷ்பா 2’ படத்தை ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சியை காண வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்து, அவரது 9 வயது மகன் படுகாயம் அடைந்தார். திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டது என்று வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார் அல்லு அர்ஜூன். இந்த நிலையில் காவல் துறையினர் அவரை கைது செய்து சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்பு அன்று மாலையே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுவனும் நேற்று உயிரிழந்தார்
‘அமரன்’ சர்ச்சை: மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான படம் ’அமரன்’. ரூ. 300 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்ற இந்த படத்தில் முகுந்தின் பின்புலம் ஏன் சரியாக குறிப்பிடப்படவில்லை? சிறுபான்மை இனத்தவரை படம் இழிவு செய்தததா? என்று பல சர்ச்சைகள் எழுந்தன.அதற்கு ராஜ்குமார் பெரியசாமி 'மேஜர் முகுந்த் வரதராஜன் இந்தியராகவும் ,பின்னர் தமிழராகவும் தன்னை அடையாளப்படுத்த விருப்புவதாக அவரின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்' என்று சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.
FDFS விமர்சனத்திற்கு தடை: ’கங்குவா’, ’வேட்டையன்’, ’இந்தியன்’ போன்ற படங்கள் அதிக எதிர்மறை விமர்சனங்களை பெற்று வசூலில் பின்தங்கியதை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திரையரங்குகளின் வளாகத்தில் FDFS (முதல் நாள் முதல் காட்சி) திரைப்பட விமர்சனத்தை தாமதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வெறுப்புணர்வை தூண்டுதலை கண்டிப்பதாகவும் தெரிவித்தது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா vs தனுஷ்: நெட்பிளிக்ஸில் வெளியாகிய ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' என்ற படத்தின் பிடிஎஸ் காட்சிகளை பயன்படுத்தியதற்காக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். எனவே நயன்தாரா தனது சமூகவலைதளப் பக்கத்தில், தன் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமே தனுஷ் இப்படி நடந்து கொண்டார் என அறிக்கை வெளியிட பற்றிக் கொண்டது பஞ்சாயத்து.
படுதோல்வி அடைந்த ‘கங்குவா’: நடிகர் சூர்யா நடித்து வெளியான ’கங்குவா’ திரைப்படத்திற்கு தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்கள் வெளிவந்தது. படத்தின் முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை, இரைச்சலாக இருக்கிறது, திரைக்கதை மோசம் என விமர்சனங்கள் பெற்றது. முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பே ’கங்குவா’ படத்தை கழுவி ஊற்றினார்கள் ரசிகர்கள். இதனால், படத்தின் வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நடிகர்களின் விவகாரத்து: 2024 சினிமா பயணத்தில் பல நிகழ்வுகள் இருந்தாலும், எல்லாராலும் முக்கியமாக பேசப்பட்டது நடிகர்களின் எதிர்பாராத அடுத்தடுத்த விவகாரத்து தான். தனுஷ் - ஜஸ்வர்யா, ஜெயம் ரவி-ஆர்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு, ஜிவி பிரகாஷ் - சைந்தவி என சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து விவகாரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.
ஹேமா கமிட்டி: மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சமத்துவமின்மை வெளிக்கொண்டு வருவதற்கு 2017 ல் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை 2019 ஆம் ஆண்டு சமர்பித்தது. மேலும், பல்வேறு காரணங்களால் அரசால் வெளியிடப்படாத இந்த அறிக்கை இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டு பெரிய சர்ச்சைக்குள்ளாகி மலையாள சினிமாவையே உலுக்கியது. இதன் மூலம் பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- சங்கீதா, மாணவப் பத்திரிகையாளர்