இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல்; வெளியே வந்தபின் அல்லு அர்ஜூன் பேசியது என்ன?

By KU BUREAU

ஹைதராபாத்: “இறந்தவர்கள் குடும்பத்துக்கு துணையாக இருப்பேன். அவர்களுக்கு மீண்டும் என்னுடைய ஆறுதல்” என அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

'புஷ்பா2’ படத்தின் ப்ரீமியர் ஷோவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் நேற்று கைது செய்யப்பட்டார். சிறையில் நேற்று இரவு அவர் சரியாக சாப்பிடவில்லை, தரையில்தான் படுத்தார் என செய்திகள் வெளியானது. இதனால், அல்லு அர்ஜூனை வெளியே அனுப்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். திரைப்பிரபலங்களும் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதனையடுத்து, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காலை வீட்டிற்கு வந்த அவரை அவரது குடும்பம் நெகிழ்ச்சியுடன் வரவேற்றது.

பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அல்லு அர்ஜூன், “நான் நலமாக இருக்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள், குடும்பம் அனைவருக்கும் நன்றி. கடந்த 20 ஆண்டுகளாக என் படம் வெளியாகும்போது நான் இதே திரையரங்கிற்கு செல்வது வழக்கம்.ஆனால், இந்த முறை துரதிர்ஷ்டவசமாக விபத்து நடந்திருக்கிறது. இதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தொடர்போ, நோக்கமோ இல்லை. இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடன் எப்போதும் நான் உடனிருப்பேன். இந்த வழக்கு தொடர்பாக வந்த அறிவுரைகள் அனைத்தையும் ஏற்கிறேன். நான் நலமுடன் இருக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE