சென்னை: சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கும் படங்கள் வெளியாகி கல்ட் கிளாசிக்காக மாறும். அப்படியான படம்தான் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம். அப்படத்தின் தொடர்ச்சியாக மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகியுள்ளது ‘சூது கவ்வும் 2’ திரைப்படம். படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனம் பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன்பு கோமாவுக்கு சென்ற அரசியல்வாதி கண்ணபிரான் (வாகை சந்திரசேகர்) பல ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து மீள்கிறார். அப்போது ஊழல்வாதியான ராதாரவி கையில் ஆட்சி கிடைக்கிறது. இதனால், மக்கள் நலனுக்காக தன் விசுவாசியான ஞானோதயம் (எம்.எஸ்.பாஸ்கர்) உதவியுடன் இன்னொரு கட்சி தொடங்குகிறார். இவரின் மகன் அருமை பிரகாசம் (கருணாகரன்). ஆன்லைன் கேம் வழியாக மக்களுக்கு தேர்தல் சமயத்தில் பணம் கொடுக்க திட்டம் தீட்டுகிறார். அதற்காக ஒரு டேப்லெட்டும் வைத்திருக்கிறார். ஆனால், திடீரென அந்த டேப்லெட் காணாமல் போகிறது. இன்னொரு பக்கம், தனது கற்பனை காதலிக்கு பல இடையூறுகள் கொடுக்கும் கருணாகரன் மீது வன்மத்தில் இருக்கிறார் மிர்ச்சி சிவா. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் என்ன முடிவு என்பதுதான் ‘சூது கவ்வும்2’ திரைப்படம்.
டார்க் ஹியூமர், திரைக்கதை, தேர்ந்த நடிகர்களின் நடிப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள் என சிறப்பாக அமைந்த படம் ’சூது கவ்வும்1’. அப்படியான கல்ட் கிளாசிக் படமாக அமைந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எனும்போது அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் எல்லாம் அமைய வேண்டும். ஆனால், இரண்டாம் பாகத்தின் திரைக்கதையிலேயே கோட்டை விட்டிருக்கிறார்கள். அந்த வஸ்து எங்கே என திரையை கிழித்து எட்டிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அரசியல் தொடர்பான காட்சிகள், சிவா கேங், நடிகர்களின் மேக்கப், இசை, செட் என அனைத்துமே சுமாராக இருக்கிறது. கதாநாயகனாக நடித்திருக்கும் நடிகர் சிவா நடிப்பில் தனக்கு என்ன வருமோ அதை செய்திருக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதாரவி சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் பெரும் பலமாக அமைந்த டார்க் ஹ்யூமர் இரண்டாம் பாகத்தில் அங்கங்கே நம்மை சிரிக்க வைக்கிறது. பல இடங்களில் சோதிக்கிறது. அந்த ‘சில இடங்களில்’ உணவு டெலிவரி காட்சி ரசிக்க வைக்கிறது. சமகால அரசியலை பகடி செய்து திணிக்கப்பட்ட காட்சிகளும் வசனங்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. அதேபோல, முதல் பாகத்தில் கதாநாயகி படம் முழுக்க வரவில்லை. ஆனால், இங்கு படம் முழுக்க வருவதும் அவருக்கான காட்சிகள் இருப்பதும் அசுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஆக, மொத்தத்தில் முதல் பாகத்திற்கு நியாயம் சேர்க்காத சுமாரான இரண்டாம் பாகமாக அமைந்திருக்கிறது ‘சூது கவ்வும்2’.
» நடிகர் அல்லு அர்ஜூனை கட்டிப்பிடித்து கலங்கிய மனைவி; மகன், மகள் மகிழ்ச்சி!
» சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்... ரசிகர்கள் ஆரவாரம்