அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம் - ரசிகர்கள் நிம்மதி!

By KU BUREAU

ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. புஷ்பா – 2 திரைப்படம் பார்க்க சென்ற பெண், திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த 5ம் தேதி ‘புஷ்பா 2’ படம் வெளியானது. படம் வெளியான முதல் நாள் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வந்திருந்தார். இதனால், ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

இதனால், அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவதியின் குடும்பத்திற்கு வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாது ரூ.25 லட்சம் நிதியுதவியும் அளித்தார். மேலும், தன் மீதுள்ள வழக்கை நீக்கும்படியும் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே, திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சிக்கடப்பள்ளி காவல் துறையினரால் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டிருக்கிறார. அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE