ரஜினி பிறந்தநாளுக்கு 30 ஆண்டுகளாக இலவசமாக செருப்பு தைத்து கொடுக்கும் தொழிலாளி!

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் செருப்பு தைக்கும் தொழிலாளி ரஜினி பெருமாள்சாமி கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி பிறந்த நாளன்று பணம் வாங்காமல் இலவசமாக செருப்பு தைத்து கொடுத்து வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த ரஜினி பெருமாள்சாமி (65). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் எதிரே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர், தனது பெயரை ரஜினி பெருமாள்சாமி என வைத்துக் கொண்டார்.

இவரை ரஜினி என கூறினால் தான் அப்பகுதி மக்களுக்கு அடையாளம் தெரியும். இவர் தனது மகன்களுக்கு வீரா, மாடசாமி என்ற பாட்ஷா, பேரன்களுக்கு பேட்ட என்ற வீரபுத்திரன், அண்ணாத்த என்ற சாமி என பெயர் வைத்துள்ளார். பெருமாள்சாமி கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி அன்று தன்னிடம் செருப்பு தைக்க வருபவர்களிடம் பணம் வாங்காமல் இலவசமாக செருப்பு தைத்து வருகிறார்.

இதுகுறித்து ரஜினி பெருமாள் சாமி கூறியதாவது: “6-ம் வகுப்பு படிப்பது முதல் ரஜினி ரசிகராக இருந்து வருகிறேன். போயஸ் கார்டன் சென்று 3 முறை ரஜினி நேரில் சந்தித்துள்ளேன். கடந்த 1989-ம் ஆண்டு ஜூலை மாதம் ரஜினியை பார்க்க போயஸ் கார்டன் சென்று ஒரு நாள் முழுவதும் காத்திருந்து பார்த்தேன். செருப்பு தைக்கும் தொழில் செய்கிறேன் என்று கூறியதும் என்னை பாராட்டி, குடும்பத்தை கவனிக்க வேண்டும் என அறிவுரை கூறி சாப்பிட வைத்து ரூ.500 கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

செருப்பு தைப்பதன் மூலம் தினசரி ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி அன்று அனைவருக்கும் இலவசமாக செருப்பு தைத்து வருகிறேன். தற்போது 31-வது ஆண்டாக ரஜினி பிறந்த நாளில் இலவசமாக செருப்பு தைத்து கொடுத்து வருகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE