ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல: அமீர் அறிவுரை

By KU BUREAU

சென்னை: செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

திமுக குறித்து ஆதவ் அர்ஜுனா, விஜயின் கருத்துகள் அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான அமீர் தனது வாட்ஸ் அப் பதிவில், ‘ ஒருவர் பிறப்பால் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஆனால் ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதலமைச்சராகவே முடியாது. செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல’ என தெரிவித்துள்ளார்

சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும், பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதல்வர் ஆகக்கூடாது என பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பை கிளப்பினார்.

இந்த விழாவில் பேசிய விஜய், "மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்." என்று பேசியதும் சலசலப்பை உருவாக்கியது.

இதுதொடர்பாக வேலூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை. யார் இங்கே பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்துதான் முதல்வர் ஆனார். அந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு” என கோபமாக தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE