‘புஷ்பா 2: தி ரூல்’ திரை விமர்சனம்!

By KU BUREAU

சென்னை: 'புஷ்பா 1: தி ரைஸ்' திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் புது சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்றது. படம் வெளியீட்டிற்கு முன்பே பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 100 கோடி வசூல் செய்ததாகப் படக்குழு அறிவித்தது. படம் வெளியான பிறகு ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளை ‘புஷ்பா 2: தி ரூல்’ பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

செஞ்சந்தன மரம் வெட்டி கடத்தல் வேலைக்குச் செல்லும் புஷ்பாராஜ் தடைகளைக் கடந்து, பல வில்லன்களை மிதித்து, டானாக எப்படி வளர்கிறான் என்பதுதான் ‘புஷ்பா1: தி ரூல்’ படத்தின் கதை. இதேபோல, எளிமையான கதைதான் ‘புஷ்பா2: தி ரைஸ்’. டானாக வளர்ந்த புஷ்பாராஜ் ஆட்சி, அதிகாரத்தை எதிர்த்து தான் இருக்கும் இடத்தில் எப்படி டானாக ஆள்கிறான் என்பதுதான் ‘புஷ்பா 2: தி ரைஸ்’ படத்தின் கதை. புஷ்பா உலகத்தில் பணத்திற்கும் பதவிக்கும் பயம் கிடையாது. அந்த அளவுக்கு திரும்பும் பக்கமெல்லாம் புஷ்பா ஆட்சிதான். புஷ்பாராஜாக அல்லு அர்ஜூன். தனி ஆளாக படத்தை தோளில் சுமந்திருக்கிறார்.

ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என நடிப்பிலும் குறையில்லை. படத்தின் ஹைலைட்டான தருணங்களாக மூன்று சண்டைக்காட்சிகளை சொல்லலாம். புஷ்பா அறிமுகத்தில் வரக்கூடிய சண்டைக்காட்சி, ஜாதாரா சண்டைக்காட்சி, படத்தின் இரண்டாம் பாதியில் பழைய கோட்டையில் வரும் ஒரு சண்டைக்காட்சி ஆகியவை ப்ளஸ். நடிகர்கள், ஆக்‌ஷன் கொரியோகிராஃபி, விஎஃப்எக்ஸ், இசை என எல்லாமே சரியாக இந்த காட்சிகளில் வேலை செய்திருக்கிறது. தயாரிப்பிலும் குறை இல்லாமல் பிரம்மாண்டம் காட்டியிருக்கிறார்கள்.

அடிபட்ட புலியாக பகத் பாசில். புஷ்பாவை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வரும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் அவருக்கு. குறிப்பாக, அல்லு அர்ஜூன் பகத்திடம் மன்னிப்பு கேட்கும் காட்சியில் பகத் நடிப்பு கிளாஸ். கணவனுக்கு ஆதரவு கொடுக்கும் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா (ஸ்ரீவள்ளி). கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், சுனில் என துணை கதாபாத்திரங்களும் நன்றாக வந்திருக்கிறது.

டெக்னிக்கல் டீம் படத்தின் மிகப்பெரிய பலம். மிரஸ்லோ குபா பிரோக்ஸூடைய ஒளிப்பதிவும், விஎஃப்எக்ஸ் குறை சொல்ல முடியாத பணி கொடுத்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 'புஷ்பா புஷ்பா, சூசேகி’ பாடல்கள் நன்று. ஃபீலிங்க்ஸ், கிஸ்கிஸா பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. சாம் சிஎஸ்ஸூடைய பின்னணி இசை காதை பதம் பார்க்காமல் கச்சிதமான மீட்டரில் மாஸ் கூட்டியிருக்கிறது. அதேபோல, பல காட்சிகளில் தெலுங்கு வாடை அடித்தாலும் அதைக் காப்பாற்றி கொண்டு செல்வது மதன் கார்க்கியின் நேர்த்தியான தமிழ் வசனங்கள்தான்.

’புஷ்பா’ முதல் பாகத்தின் மைனஸாக பார்க்கப்பட்ட விஷயம் அதனுடைய ரன் டைம். இரண்டாம் பாகத்திலும் அதே குறைதான். 3.30 மணி நேரம் ஓடும் கதையில் புஷ்பாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பகத், புஷ்பாவை வீழ்த்த செய்யும் வில்லத்தனம் எல்லாம் அதர பழசாகவே இருக்கிறது. ராஷ்மிகா- அல்லு அர்ஜூன் காதல் காட்சிகளிலும் பெரிதாக ஈர்ப்பில்லை. முதல் பாதியில் அல்லு அர்ஜூன் vs பகத் என நகரும் கதை இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் நோக்கி நகர்கிறது. ஒருக்கட்டத்தில் புஷ்பா படம் பார்க்கிறோமோ அல்லது புஷ்பா சீரியல் பார்க்கிறோமோ என நாம் குழம்பும் அளவுக்கு எமோஷன் ஓவர் டோஸ். முதல் பாதியில் கதை முடித்து இடைவேளை நோக்கி செல்லும் சந்தர்ப்பங்கள் பல இடங்களில் தென்பட்டாலும் அதை எல்லாம் விடுத்து வழவழ என இழுத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் புஷ்பா கையை கட்டி விட்டதால் காலில் சண்டை போடுவார். அதனால், இரண்டாம் பாகத்தில் கை, கால் இரண்டையும் கட்டிவிடுவார்கள். அவர் வாயில் சண்டை போடுகிறார். ஒரு பக்கம் மாஸாக இருந்தாலும், இன்னொரு பக்கம் மூன்றாம் பாகத்தில் வாயை கட்டிவிடுவார்களோ என தோன்றும் அளவுக்கு சிரிப்பும் வருகிறது.

புஷ்பா நினைத்தால் முதல்வரை மாற்றலாம், ஸ்ரீலங்கா பார்டர் தாண்டலாம், ஹெலிகாப்டர் வாங்கலாம் என எந்த லாஜிக்கும் இல்லாமல் இஷ்டத்துக்கு கோக்கு மாக்கு காட்டியிருக்கிறார்கள். அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா படத்தின் ரசிகர்கள் என்றால் இந்த கமர்ஷியல் விஷயங்கள் எடுபடும். மற்றபடி ’புஷ்பா 1’ படத்தை விடவும் சுமாரான படமாக வந்திருக்கிறது ‘புஷ்பா 2’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE