REWIND 2024: தனுஷ் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை; பிரபலங்களின் அதிர்ச்சி விவாகரத்து!

By KU BUREAU

சென்னை: இந்த வருடம் 2024 முடிய இன்னும் சில வாரங்களே இருக்கிறது. சினிமா நிகழ்வுகளைப் பொருத்தவரை இந்த வருடத்தில் திரும்பிப் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதில், சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல பிரபலங்களின் விவாகரத்தும் நிகழ்ந்தது. நடிகர் தனுஷ் முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை எந்தெந்த பிரபலங்கள் விவாகரத்து செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடியின் வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. ‘கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவு’க்கு வந்ததுபோல, புகைந்து கொண்டிருந்த இவர்கள் பிரிவு விவாகரத்தாக வெடித்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தது இந்த ஜோடி. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோதும் இவர்கள் நேரில் ஆஜராகவில்லை. இதனால், சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு விட்டார்கள், மகன்கள் யாத்ரா- லிங்காவுக்காக தனுஷ்- ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த நவம்ப 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான இருவரும் தங்களுக்கு ஒன்று சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்பதை உறுதியாக தெரிவிக்க, நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

ஜிவி பிரகாஷ்- சைந்தவி: பள்ளி காலத்தில் இருந்தே காதலர்களாக வலம் வந்த ஜிவி பிரகாஷ்- சைந்தவி ஜோடி கடந்த 2013ல் திருமணம் செய்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பாடிய ஹிட் பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இசை வாழ்க்கையை போலவே இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் குழந்தை அன்வியோடு மகிழ்வாக சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இவர்கள் விவாகரத்து அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்.

ஜெயம் ரவி- ஆர்த்தி: காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி ஜெயம் ரவியும் ஆர்த்தி. 15 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்தனர். திடீரென தனது சமூகவலைதளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார் ஜெயம் ரவி. ஆனால், ரவியுடன் சேர்ந்து வாழவே விருப்பம் எனவும் விவாகரத்து பற்றி தன்னிடம் கலந்து பேசாமல் ரவியே எடுத்த தன்னிச்சை முடிவு இது என்றும் பதிலுக்கு ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார். தன்னை மனைவியும், மாமியாரும் அடிமைப்படுத்துவதாக ரவி மறைமுகமாக குற்றம் சாட்டினார். இருவரையும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், இன்னமும் முடிவு எட்டப்படவில்லை.

ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு: இந்த வருடத்தின் எதிர்பார்க்காத ஒரு பிரபலத்தின் விவாகரத்து அறிவிப்பு என்றால் அது நிச்சயம் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானுவுடையதுதான். திருமண வாழ்க்கை 30 ஆவது வருடத்தை எட்டும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த பிரிவு இருவருக்குமே மனவருத்தத்தை அளிக்கிறது என சொன்னார் ரஹ்மான். தனது உடல்நலன் பொருட்டே பிரிவதாகவும் ரஹ்மான் மீது அவதூறு பரப்ப வேண்டாம் எனவும் சாய்ரா பானு மற்றும் அவர்களுடைய மகன், மகள்களும் சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தினார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE